தமிழக முதலமைச்சர், பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை 2015 இன் காரணமாக சேதமடைந்த விவசாயப்பயிர்கள் மற்றும் தோட்டக்கலைப்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்திற்குப்பட்ட விவசாயப்பயிர்களுக்கு ரூ. 15கோடியே 10 லட்சத்து 38 ஆயிரமும், தோட்டக்கலைப்பயிர்களுக்கு ரூ.11கோடியே 61 லட்சத்து 91 ஆயிரமும் நிதிஒதுக்கீடு வரப்பெற்றுள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயப் பயிர்கள் மற்றும் தோட்டக் கலைப் பயிர்கள் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் மூலமாக நேரடியாக சாகுபடி செய்யப்பட்ட நிலங்களை பார்வையிடப்பட்டு கணக்கெடுப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சேதத்தின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்களிடமிருந்து பெறப்பட்ட அறிக்கையின் பேரில் வேளாண்மைப் பயிர்களுக்கு அரசாணையின்படி ஹெக்டேர் ஒன்றுக்கு நிவாரணத்தொகையாக ரூ. 7,410- ம், தோட்டக் கலைப் பயிர்களுக்கு எக்டேர் ஒன்றுக்கு நிவாரணத்தொகையாக ரூ. 13,500- ம், குறைந்த பட்சம் ரூ.1,000- என கணக்கிடப்பட்டு தொடர்புடைய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட உள்ளது.
அதன்படி கடந்த 02.02.2016 முதல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தொடர்புடைய தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கணக்கு துவங்கப்பட்டு நிவாரணத்தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 வட்டங்களிலும் வேளாண்மைப் பயிர்கள் பாதிக்கப்பட்ட 52 ஆயிரத்து 607 விவசாயிகளுக்கு ரூ.14கோடியே 35 லட்சத்து 17 ஆயிரத்து 469ம், தோட்டக் கலைப் பயிர்கள் பாதிக்கப்பட்ட 22 ஆயிரத்து 309 விவசாயிகளுக்கு ரூ.11 கோடியே 27 லட்சத்து 93 ஆயிரத்து 48ம் நிவாரணம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே, மழை வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகள் தங்கள் பகுதிக்குட்பட்ட கிராம நிர்வாக அலுவலரை நேரில் தொடர்புகொண்டு நில விபரங்களை தெரிவித்து உரிய அடையாள சீட்டு பெற்று சம்மந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் சமர்ப்பித்து தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தங்களுக்கான வங்கி கணக்கில் உள்ள தொகையினை பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் நந்தக்குமார் தெரிவித்துள்ளார்.