The Perambalur collector consultant with the HM on the results of the quarterly examination
பெரம்பலூர் : காலாண்டு தேர்வு முடிவுகள் குறித்து உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பள்ளி வாரியாக மாணவ, மாணவிகள் காலாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பள்ளி பெற்ற தேர்ச்சி விகிதம் குறித்து குறித்து விரிவாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் தேர்ச்சி விகிதம் குறைவாக காணப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரிகளிடம் தேர்ச்சி விகிதம் உயர்வடைவதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:
இந்தாண்டு அரசுத் தேர்வுகளை எதிர்கொள்ள உள்ள 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தில் அனைத்து பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்களும் முழு கவனம் செலுத்த வேண்டும்.
நடந்து முடிந்த காலாண்டுத் தேர்வில் தேர்ச்சிப்பெறாத மாணவ, மாணவிகளை நடைபெற உள்ள அரசுப் பொதுதேர்வில் முழு ஈடுபாட்டுடன் படித்து அவர்களது பொது தேர்வினை சிறப்பான முறையில் எழுதிட அனைத்து தலைமை ஆசிரியப் பெருமக்களும், கடுமையாக உழைத்திட வேண்டும்.
மாணவர்களின் கவனம் சிதறா வண்ணம் அவர்கள் படிப்பில் முழுமையாக ஈடுபட அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி அரசு பொது தேர்வில் அனைத்து மாணவ, மாணவர்களையும் தேர்ச்சி பெற வைத்து பெரம்பலூர் மாவட்டத்தினை மாநிலத்தில் முதன்மையான மாவடட்டமாக முன்னேற்றுவது, ஒவ்வொரு தலைமை ஆசிரியரின் தலையாய கடமையாகும்.
பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் மத்தியில் சுத்தத்தின் அவசியம் குறித்தும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் எடுத்துரைக்க வேண்டும். மேலும் தங்கள் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் தங்கள் இல்லங்கள் மற்றும் பொது இடங்களில் கழிவறைகளை பயன்படுத்த அவர்களுக்கு தேவையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.
அக்டோபர் 15 ஆம் நாள் உலக கை கழுவும் தினமாக அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு நடைபெற உள்ள விழிப்புணர்வு போட்டிகளில் மாணவ, மாணவிகளை பெருமளவில் கலந்து கொள்ள ஊக்குவிக்க வேண்டும், என பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஸ்ரீதர், மாவட்ட ஆட்சியிரின் நேர்முக உதவியாளர் (பொது) மனோகரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்மொழிதேவி, மாவட்ட கல்வி அலுவலது பிரிதிவிராஜன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அம்பிகாபதி, முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பிரேம்குமார், மணிவண்ணன் மற்றும் தலைமையாசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.