The Supreme Court allowed the law school: 11-year legal battle to win! PMK. Ramadoss

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வன்னியர் கல்வி அறக்கட்டளை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள சரசுவதி சட்டக்கல்லூரிக்கு உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் இணைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருப்பதால் வரும் கல்வியாண்டு முதல் சட்டக்கல்லூரி செயல்படவுள்ளது. இது உயர்நீதிமன்றத்தில் தொடங்கி, உச்சநீதிமன்றம் வரை வன்னியர் கல்வி அறக்கட்டளை கடந்த 11 ஆண்டுகளாக நடத்திய சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும்.

சரசுவதி சட்டக் கல்லூரியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் இருந்த போதிலும், இந்தக் கல்லூரிக்கு அனுமதி அளித்தால் வடமாவட்டங்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியர் முன்னேறிவிடுவார்கள்; அது நடக்கக்கூடாது என்பதற்காகவே சட்டக்கல்லூரிக்கு அதிமுக அரசு ஏராளமான முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தியது.

கடுமையான சட்டப் போராட்டங்களுக்கு பிறகு, அந்த முட்டுக்கட்டைகள் முறியடிக்கப்பட்டு சரசுவதி சட்டக் கல்லூரிக்கு இணைப்பு அனுமதி அளித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்ட நிலையில், தனியார் சட்டக்கல்லூரிகள் தொடங்க தடை விதிக்கும் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்து நிறைவேற்றியது. இதை எதிர்த்தும், சரசுவதி சட்டக்கல்லூரிக்கு இணைப்பு அனுமதி வழங்க

ஆணையிடக் கோரியும் வன்னியர் கல்வி அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசின் சட்டம் செல்லாது என்று 26.10.2016 அன்று தீர்ப்பு வழங்கியதுடன், தீர்ப்பு நகல் கிடைத்த 4 வாரங்களில் அனுமதியளிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டது.

அதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அருண்மிஸ்ரா தலைமையிலான அமர்வு, சரசுவதி சட்டக்கல்லூரியில் போதுமான கட்டமைப்புகள் உள்ளனவா? என்பதை ஆய்வு செய்து இணைப்பு வசதி வழங்கும்படி கடந்த மார்ச் மாதம் ஆணையிட்டது.

அதைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சட்ட வல்லுனர்கள் மற்றும் பேராசிரியர்கள் அடங்கிய குழு ஆய்வு செய்து, சரசுவதி சட்டக்கல்லூரியில் வியக்கத்தக்க வகையில் கட்டமைப்பு வசதிகள் இருப்பதாக சான்றளித்ததால், அக்கல்லூரிக்கு இணைப்பு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதை உச்சநீதிமன்றமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

சரசுவதி சட்டக் கல்லூரிக்கான உட்கட்டமைப்பு வசதிகளிலோ, பேராசிரியர் நியமனங்களிலோ எந்தக் குறையும் இல்லை; அனைத்தும் சிறப்பாக உள்ளதாக ஆய்வுக்குழு சான்றளித்துள்ள நிலையில், எந்த அடிப்படையில் சரசுவதி சட்டக்கல்லூரிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அனுமதி மறுக்கப்பட்டு வந்தது என்பது குறித்து தமிழக ஆட்சியாளர்கள் கண்டிப்பாக விளக்கமளிக்க வேண்டும்.

உண்மையில் சரசுவதி சட்டக்கல்லூரிக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை. ஆனால், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகவே ஆட்சி செய்து கொண்டிருப்பதாக கூறி வரும் அதிமுகவும், திமுகவும், எந்த காரணமும் கூறாமல் கடந்த 11 ஆண்டுகளாக சரசுவதி சட்டக்கல்லூரியை முடக்கி வைத்திருந்தனர்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வியறிவும், சட்ட அறிவும் பெற்றுவிடக் கூடாது என்பதில் அதிமுகவும், திமுகவும் எந்தளவுக்கு தீவிரமாக இருந்தன என்பதற்கு சரசுவதி சட்டக்கல்லூரிக்கு எதிரான சதிகள் தான் சிறந்த உதாரணமாகும்.

மிக நீண்ட சட்டப் போராட்டம் நடத்தி தான் அதிமுக, திமுக அரசுகளின் சதிகளை முறியடிக்க முடிந்தது. திண்டிவனத்தில் வன்னியர் கல்வி அறக்கட்டளை சார்பில் சரசுவதி சட்டக்கல்லூரி தொடங்குவதென 27.06.2007 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கான அனுமதி கோரி தமிழக அரசிடம் விண்ணப்பம் செய்யப்பட்டது. ஆனால், அதன் மீது அப்போதிருந்த கலைஞர் தலைமையிலான திமுக அரசு நடவடிக்கை எடுக்காததைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அறக்கட்டளை சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

அதை விசாரித்த உயர்நீதிமன்றம், சட்டக்கல்லூரிக்கு அனுமதி அளிக்கும்படி 20.11.2008 அன்று ஆணையிட்டது. ஆனால், அந்தத் தீர்ப்பை தமிழக அரசு மதிக்கவில்லை. சட்டக்கல்லூரி விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை தமிழக அரசு மதிக்காத நிலையில், அடுத்தடுத்து அறக்கட்டளை சார்பில் தொடரப்பட்ட வழக்குகளில் 13.08.2010, 23.09.2011 ஆகிய தேதிகளில் அளிக்கப்பட்ட தீர்ப்புகளில் சரசுவதி சட்டக்கல்லூரிக்கு அனுமதி அளிக்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டது.

அதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை 25.04.2012 அன்றும், சீராய்வு மனுவை 29.01.2013 அன்றும் உயர்நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்தது. உயர்நீதிமன்றத்தின் 5 தீர்ப்புகளுக்குப் பிறகு வேறு வழியின்றி 25.02.2013 அன்று சரசுவதி சட்டக்கல்லூரிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி ஆணை பிறப்பித்தது. சட்டக் கல்லூரிக்கு அனுமதி வாங்குவதற்காக மட்டும் 6 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.

அதைத் தொடர்ந்து 09.10.2013 அன்று சட்டக்கல்லூரிக்கு இணைப்பு அனுமதி கோரி சட்டப் பல்கலைக் கழகத்தில் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து தொடரப்பட்ட வழக்குகளில் 10.12.2013, 16.04.2014, 08.08.2014 ஆகிய தேதிகளில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் சரசுவதி சட்டக்கல்லூரிக்கு இணைப்பு அனுமதி வழங்க ஆணையிட்டது.

பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், அனைத்துக் கட்டமைப்புகளும் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக ஆய்வுக்குழு அறிக்கையளித்த பிறகும் இணைப்பு அனுமதி வழங்கப்படவில்லை. மாறாக தமிழகத்தில் தனியார் சட்டக்கல்லூரி தொடங்க தடை விதிக்கப்பட்டது.

இதையும் எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தனியார் சட்டக்கல்லூரிக்கு தடை விதிக்கும் அரசின் சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19(1)(ஜி) பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களை நடத்தும் உரிமைக்கு எதிரானது;கல்வி வழங்கும் புனிதப்பணிக்கு முட்டுக்கட்டைப் போடக் கூடாது என்று கூறி இணைப்பு அனுமதி வழங்க ஆணையிட்டது.

அதுமட்டுமின்றி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வன்னியர் கல்வி அறக்கட்டளை தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசால் செலுத்தப்பட்ட ரூ.20,000 அபராதத்துக்கான காசோலை வன்னியர் கல்வி அறக்கட்டளை வசம் ஒப்படைக்கப்பட்டது.

அபராதத்தை கட்டிய பிறகும் கூட, உயர்நீதிமன்றத்தின் ஆணையை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு மதிக்கவில்லை. அதன்பிறகு உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட சட்டப் போராட்டத்தின் பயனாகவே சரசுவதி சட்டக் கல்லூரிக்கு இப்போது சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைப்பு அனுமதி கிடைத்துள்ளது.

சரசுவதி சட்டக் கல்லூரிக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்பது தான் அதிமுக, திமுக அரசுகளின் நோக்கமாக இருந்தது. அதனால் தான் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகக் கழகத்தின் வல்லுனர் குழுவும், இந்திய பார் கவுன்சில் குழுவும் இருமுறை ஆய்வு நடத்தி அனுமதி அளிக்கலாம் என்று அறிக்கை அளித்த பிறகும் சட்டக் கல்லூரிக்கு தமிழக அரசும், பல்கலைக்கழகமும் இணைப்பு அனுமதி வழங்கவில்லை.

இப்போது உச்சநீதிமன்ற ஆணைப்படி பல்கலைக்கழகத்தின் வல்லுனர் குழு மூன்றாவது முறையாக ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்த பிறகு தான் வேறு வழியின்றி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது இன்னொரு அதிர்ச்சிகரமாக உண்மை வெளியாகியுள்ளது.

அதாவது கோவை, திருச்சி, நெல்லை ஆகிய நகரங்களில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகள் பார் கவுன்சில் அங்கீகாரம் இல்லாமலேயே செயல்பட்டு வருகின்றன என்பது தான் அந்த அதிர்ச்சி தகவல் ஆகும். அரசு கல்லூரிகளை அங்கீகாரம் இல்லாமல் நடத்தும் அதிமுக, திமுக அரசுகள், அனைத்து வசதிகளும் கொண்ட சரசுவதி சட்டக் கல்லூரிக்கு அனுமதி அளிக்க மறுத்ததற்கு காரணம் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான மனநிலை என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?

தமிழகத்தில் சட்டக்கல்விக்கு எதிராக திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் ஆட்சிகள் மேற்கொண்ட சதிகளுக்கு எதிராக பார் கவுன்சில் தான் சட்டப்போராட்டம் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், வன்னியர் கல்வி அறக்கட்டளை தான் யாருடைய ஆதரவும் இல்லாமல் தனித்துப் போராட்டம் நடத்தி வென்றுள்ளது. போதிய அளவுக்கு சட்டக்கல்லூரி இல்லாத மாநிலங்களில் மிகவும் முக்கியமானது தமிழ்நாடு ஆகும்.

தமிழகத்தில் 10 அரசு சட்டக் கல்லூரிகளும், ஒரே ஒரு தனியார் கல்லூரியும் மட்டுமே உள்ளன. தமிழகத்தில் சட்டப்படிப்பு படிக்க விண்ணப்பம் செய்பவர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு இடம் கிடைப்பதில்லை. அவர்கள் ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கானா மாநிலங்களுக்கு சென்று தான் சட்டப்படிப்பு படிக்கின்றனர். இதற்குக் காரணம் தமிழகத்தில் போதிய அளவில் சட்டக்கல்லூரிகள் அமைக்கப்படவில்லை என்பது தான்.

உத்தரப்பிரதேசத்தில் 459 சட்டக் கல்லூரிகளும், மத்தியப் பிரதேசத்தில் 161, மராட்டியத்தில் 140, ராஜஸ்தான் மற்றும் கர்நாடகத்தில் தலா 125 கல்லூரிகளும், ஒருங்கிணைந்த ஆந்திரத்தில் 80 சட்டக் கல்லூரிகளும் உள்ளன. ஆனால், தமிழகத்தில் 10 அரசு சட்டக் கல்லூரிகளும், ஒரு தனியார் கல்லூரியும் மட்டுமே உள்ளன.

அதிலும், குறிப்பாக திருவண்ணாமலை, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர் போன்ற மாவட்டங்களில் சட்டக்கல்லூரிகள் இல்லாத நிலையில், சரசுவதி சட்டக் கல்லூரி வரப்பிரசாதமாக அமையும். இப்படிப்பட்ட கல்லூரி வராமல் தடுத்ததன் மூலம் அதிமுக, திமுக ஆட்சிகள் பெருந்துரோகம் செய்துள்ளன.

சதிகளையும், முட்டுக்கட்டைகளையும் முறியடித்து தொடங்கப்பட்டுள்ள சரசுவதி சட்டக்கல்லூரி சமூக நீதிக்கு உட்பட்டு ஏழை மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் சட்டக் கல்வி வழங்கும் பணியில் அர்ப்பணித்துக் கொள்ளும். மாணவர் சேர்க்கை உள்ளிட்ட விவரங்கள் குறித்து விரைவில் விளக்கமாக அறிவிக்கப்படும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!