The woman who came to the Perambalur Collector’s Office to submit a petition fainted; Collector order to have a mobile medical team!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் கற்பகம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 373 மனுக்கள் பெறப்பட்டது.

இக்கூட்டத்தில் அரும்பாவூரைச் சேர்ந்த அஸ்மாபி என்பவர் கலெக்டர் கற்பகத்திடம் மனு வழங்கிவிட்டு, திரும்பிச் செல்லும் போது திடீரென்று மயக்கமடைந்தார். கலெக்டர் உத்தரவுப்படி அவரை உடனடியாக அரசு வாகனத்தில் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை வழங்கினர். குறைந்த இரத்த அழுத்தம் இருந்ததால் திடீர் மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்குப் பின் அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் கலெக்டரிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து, இனிவரும் காலங்களில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும் நாட்களில், பொதுமக்கள் அதிகம் வருவதால் இதுபோன்ற சம்பவங்களில் துரிதமாக செயல்பட நடமாடும் மருத்துவக் குழுவினர் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

முன்னதாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் அதிகப்படியான மனுக்களின்மீது துரித நடவடிக்கை எடுத்துள்ள துறைகளின் அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டினார். அதேநேரம், ஒருமாதத்திற்கும் மேலாக அதிக எண்ணிக்கையிலான மனுக்களை நிலுவையில் வைத்துள்ள அலுவலர்கள், குறைந்த எண்ணிக்கையிலான மனுக்களுக்கு மட்டும் நடவடிக்கை எடுத்துள்ள அலுவலர்கள் இனிவரும் நாட்களிலும் இதுபோல் செயல்பட்டால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்தார்.

இதில், அனைத்து துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!