Threatening Vitamin ‘D’ Deficiency: The Game Must Be Forced! PMK founder Ramdoss!

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :

தமிழ்நாடு உட்பட ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்கொண்டு வரும் மிகப்பெரிய உடல்நலக் குறைபாடு குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் ஆய்வில் வெளியாகியுள்ளன. விட்டமின் டி குறைபாடு தான் இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நோய் ஆகும். இந்தியாவில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டோரை பீடித்துள்ள விட்டமின் டி குறைபாட்டை போக்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

லண்டனில் இருந்து வெளிவரும் நேச்சர் (Nature) அறிவியல் இதழில் வெளியாகியுள்ள கட்டுரையில் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாட்டு மக்கள் விட்டமின் டி குறைபாட்டால் எவ்வளவு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . மனித இரத்தத்தில் 30 நானோகிராம்/மி.லி அளவுக்கும் குறைவாக விட்டமின் டி இருந்தால் அது குறைபாடு ஆகும். விட்டமின் டி அளவு 12 நானோகிராம்/மி.லி அளவுக்கும் குறைவாக இருந்தால் அது கடுமையான குறைபாடு ஆகும். இந்தியாவில் 49 கோடி பேர் விட்டமின் டி குறைபாடு கொண்டிருக்கிறார்கள்; இந்திய மக்கள்தொகையில் 20 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்கள் கடுமையான விட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நேச்சர் அறிவியல் இதழ் கூறியுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு மே மாதம் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், இந்திய மக்கள்தொகையில் 76 விழுக்காட்டினர் விட்டமின் டி குறைபாடு கொண்டவர்கள் என்று தெரியவந்துள்ளது. சென்னையில் 35 & 55 வயது வரையுள்ளவர்களில் 55 விழுக்காட்டினர் விட்டமின் டி குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உடற்பருமன் கொண்டவர்களில் 80 விழுக்காட்டினருக்கு இந்தக் குறைபாடு உள்ளது.

விட்டமின் டி குறைபாடு என்பது நோயா? என்றால் நிச்சயமாக இல்லை. அது ஒரு குறைபாடு தான். ஆனால், அது நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும். அதனால், அனைத்து வகையான தொற்று நோய்களும் மனிதர்களிடத்தில் மிக எளிதாக தொற்றிக் கொள்ளும். எலும்பின் உறுதித்தன்மையை விட்டமின் டி குறைபாடு குறைக்கும் என்பதால் எலும்பு முறிவு போன்ற பாதிப்புகள் ஏற்படும். இவை அனைத்துக்கும் மேலாக தூக்கமின்மை, மன அழுத்தம், மகிழ்ச்சிக் குறைபாடு, அடிக்கடி மனநிலை மாறுதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். விட்டமின் டி குறையை போக்கினால் இதிலிருந்து விடுபடலாம்.

ஆரஞ்சு சாறு, பால், பாலாடைக் கட்டி, தானியங்கள் ஆகிய சைவ உணவுகளிலும், முட்டையின் மஞ்சள் கரு, சூரை, கானாங்கெளுத்தி, சல்மான் உள்ளிட்ட வகை மீன்கள், மீன் எண்ணெய், மாட்டிறைச்சிக் கொழுப்பு, பன்றி இறைச்சிக் கொழுப்பு ஆகியவற்றில் விட்டமின் டி அதிகம் உள்ளது. இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் விட்டமின் டி சத்தை ஓரளவுக்கு அதிகரிக்க முடியும். ஆனால், உணவின் மூலமாக மட்டுமே விட்டமின் டி சத்துக் குறைபாட்டை போக்க முடியாது.

ஒரு வயது முதல் 70 வயது வரை உள்ளவர்களுக்கு 600 சர்வதேச யூனிட்டுகளும், 70 வயதைக் கடந்தவர்களுக்கு 800 சர்வதேச யூனிட்டுகளும் விட்டமின் டி தேவை. இந்த அளவுக்கு விட்டமின் டி உணவின் மூலமாக மட்டும் கிடைக்காது. இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் சூரிய ஒளி அதிகமாக கிடைக்கும் நிலையில், சூரிய ஒளி நமது உடலில் படும்படி செய்வதும், வயது முதிர்ந்தவர்கள் கூடுதலாக விட்டமின் டி மாத்திரைகளை எடுத்துக் கொள்வதும் தான் தீர்வு ஆகும். ஆனால், நமது நாட்டில் கொரோனா பரவல் அச்சம், வீட்டிலிருந்து வேலை செய்தல், குளிரூட்டப்பட்ட அலுவலகங்கள் உள்ளிட்ட காரணங்களால் மக்கள் சூரிய ஒளியில் நடமாடுவது அதிசயத்திலும் அதிசயமாகி விட்டது.

விட்டமின் டி குறைபாடு என்பது பொதுவாக பதின்வயதில் தான் தொடங்குகிறது. இதற்கான முதன்மைக் காரணம் குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவது குறைந்து விட்டது தான். பள்ளிக்கூடங்களில் விளையாட்டுப் பாடவேளை என்பதே இப்போது இல்லாமல் போய்விட்டது. மாலை வெயிலில் விட்டமின் டி அதிகமாக உள்ளது. அது குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதால் தான் மாலை வேளையில் விளையாட்டு பாடவேளை வைக்கப்படுகிறது. ஆனால், இப்போது மதிப்பெண்களே முதன்மையானதாக மாறி விட்டதால் விளையாட்டை பள்ளி நிர்வாகங்களும் அனுமதிப்பதில்லை; பெற்றோர்களும் விரும்ப வில்லை.

மாணவர்களின் நிலை இப்படி என்றால், மற்றவர்கள் பெரும்பாலும் வெளியில் நடமாடுவதைக் குறைத்துக் கொண்டது தான் இந்நிலைக்கு காரணம் ஆகும். இளைஞர்கள், இளம்பெண்கள் சூரிய ஒளியிலிருந்து சருமத்தைக் காத்துக் கொள்வதற்காக கிரீம்களை தடவிக் கொள்வதால் சூரிய ஒளி முகத்தில் படுவதில்லை; அதனால் அவர்களுக்கு விட்டமின் டி குறைபாடு ஏற்படுகிறது. நம்மைக் காக்க இவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும்.

நீரிழிவு நோய் போன்று விட்டமின் டி குறைபாடு வரும் காலத்தில் மிகப்பெரிய சிக்கலாக மாறப்போகிறது. அதைக் கருத்தில் கொண்டு விட்டமின் டி குறைபாடு ஏற்படுவதை தடுப்பதற்காக சிறப்புத் திட்டத்தை உருவாக்கி தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். அதன் ஒரு கட்டமாக பள்ளிகளில் வாரத்திற்கு 5 பாடவேளைகள் விளையாட்டு கட்டாயமாக்கப்பட வேண்டும். மாலை வெயிலில் மக்கள் நடைபயிற்சி செய்வதற்கு ஏற்ற வகையில் பூங்காக்களும், விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் திடல்களும் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட வேண்டும். விட்டமின் டி குறைபாட்டின் தீமைகள், அதைப் போக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!