Transparency in agricultural subsidy programs: urges farmers to Namakkal in Redressal Meeting

வேளாண் மானிய திட்டங்களின் பலனை சில குறிப்பிட்ட விவசாயிகள் மட்டுமே தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர். மானிய திட்டங்களில் அனைத்து தரப்பு விவசாயிகளும் பயன்பெறும் வகையில் பயனாளிகள் தேர்வில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தி்ல் விவசாயிகள் வலியுறுத்தினர்.

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி, நாமக்கல் சார் ஆட்சியர் .கிராந்திகுமார் பதி முன்னிலை வகித்தனர். வேளாண்மை இணை இயக்குநர் ஜெ.சேகர், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் .பாலமுருகன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதில் பங்கேற்ற விவசாயிகளின் கோரிக்கை விவரம்:

சுந்தரம்: நாமக்கல் மாவட்டத்தில் 2016 ஆம் ஆண்டில் வேளாண் காப்பீட்டு திட்டத்தில் பிரிமியம் செலுத்திய பயிர் பாதிப்பு ஏற்பட்ட செல்லப்பம்பட்டி அருகே ஏழூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு இதுவரை காப்பீட்டு நிவாரணம் இதுவரை வழங்கப்படவில்லை.

கொல்லிமலையில் இருந்து மழை நீர் காளப்பநாயக்கன்பட்டி வரை பல்வேறு ஏரி, குளங்களுக்கு நீர் ஆதராமாக உள்ளது. கொல்லிமலையில் இருந்து காளப்பநாயக்கன்பட்டி வரையிலான வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க வேண்டும்.
ஓமசமுத்திரம் ஏரியில் அண்மையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. ஆனால் தனி நபர் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் இன்னும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளது. இங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டக்கூடாது.

ஆட்சியர்: ஓம சமுத்திரம் ஏரி ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும். இதுபோல் கொல்லிமலையில் இருந்து தண்ணீர் வரும் வரத்து வாய்க்கால்களில் தண்ணீர் வருவதில் உள்ள தடைகள் அகற்றப்படும்.

மெய்ஞானமூர்த்தி:மானாவாரியாக நிலக்கடலை பயிரிட்டு மழையில்லாதால் இழப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு சாகுபடி செலவை நிவாரணமாக வழங்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் எ வகுப்பு உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத்தொகையை வழங்க வேண்டும்.

இணைப்பதிவாளர்: மாவட்டத்தில் 122 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் லாபத்தில் இயங்குகின்றன. இந்த சங்கங்கள் உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத்தொகை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்படும். இப்போது தேர்தல் முடிந்துள்ளதால் வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்னர் இந்த பங்கு ஈவுத்தொகை வழங்க நடவடிக்கையெடுக்கப்படும்.

சரவணன்: வேளாண்மை மானிய திட்டங்களில் ஒரு குறிப்பிட்ட சில விவசாயிகள் மட்டுமே தொடர்ந்து பயனடைந்து வருகின்றனர். மானி்ய திட்டங்களுக்கு விவசாயிகளை தேர்வு செய்வதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். இதற்கு முக்கிய காரணம் வேளாண்மைத்துறை அதிகாரிகள் தான், இதனால் முறைகேடுகளை தவிர்க்க வேளாண்மைத்துறை அலுவலர்களை பிற மாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்ய வேண்டும்.

இதுபோல் பயிர்க்கடன் வாங்கும் விவசாயிகளுக்கு கடனில் ஒரு பகுதி அளவுக்கு உரம் வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற விதியை தளர்த்த வேண்டும். இப்போது பால் உற்பத்தியாளர்களுக்கு 25 நாட்களுக்கு மேல் பணம் வழங்கப்படாமல் உள்ளது. பண்டிகை காலம் என்பதால் பால் பணத்தை விரைந்து விநியோகம் செய்ய நடவடிக்கையெடுக்க வேண்டும்.

பெரியசாமி: ராஜவாய்க்காலில் படர்ந்துள்ள குளிரி என்ற நீர் தாவரத்கால் நீரோட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தாவரத்தை அகற்ற நடவடிக்கையெடுக்க வேண்டும், வாய்க்காலில் திரவக்கழிவுகளை கலக்கும் உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து தொகையை பெற்று வாய்க்காலை சீரமைக்கும் பணியை தொடங்க வேண்டும். ராஜவாய்க்கால் பாசன விவசாயிகளின் கோரிக்கைகளை தெரிவிக்க, மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் 3 மாதங்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்த வேண்டும்.

குப்புதுரை: நாமக்கல் மாவட்டத்தில் காவிரி பாசன விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.500 வசூலிக்கப்படுகிறது. இந்த தீர்வையை ரத்து செய்ய வேண்டும்.
மாவட்ட வருவாய் அலுவலர்: தண்டத்தீர்வை தொடர்பாக 13 நீதீமன்ற தீர்ப்புகள் உள்ளன. இதனை ஆய்வு செய்து தீர்வையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என அரசின் கவனத்துக்கு எடுத்துச்சென்றுள்ளோம்.

பூபாலன்: ஏரி, குளங்களில் உள்ள மதகுகளில் நீர்ப்போக்கிகளை முழுமையாக ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும். மதகுகளில் உள்ள நீர்போக்கிகள் இப்போது கண்ணாடி துண்டுகளால் நிரம்பியுள்ளது. விரைவில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கவுள்ள நிலையில் நீர்ப்போக்கிகளை முழுமையாக சீரமைப்பது மட்டுமல்லாமல், மதகின் மேல் பகுதியை இடைவெளி இல்லாமல் அடைத்துவிட வேண்டும். இதுபோல் கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள உலர் களங்களை சீரமைத்துக்கொடுக்க வேண்டும்.

ஆட்சியர்: பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் ஏரி, குளங்களில் உள்ள மதகுகள் ஆய்வு செய்யப்பட்டு, சீரமைக்கப்படும். உலர் களங்களை புதிதாக அமைக்கவும், இப்போது உள்ள உலர் களங்களை சீரமைக்கவும் நடவடிக்கையெடுக்கப்படும்.

ராஜேந்திரன்: மாவட்ட அளவில் பால் உற்பத்தியாளர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தை 3 மாதங்களுக்கு ஒரு முறை நடத்த வேண்டும். பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என அண்மையில் முதல்வரை சந்தித்து மனு அளித்துள்ளோம்.

கடந்த 4 ஆண்டுகளாக பால் கொள்முதல் விலை உயர்த்தப்படாத நிலையில், கோரிக்கையை இந்த கூட்டம் வாயிலாக முதல்வரின் கவனத்துக்கு மீண்டும் கொண்டு செல்ல வேண்டும்.

நடேசன்: நீரா இறக்க உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி, குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் தென்னை மரம் வைத்துள்ள விவசாயிகளுக்கு நீரா இறக்க அனுமதி அளிக்க வேண்டும்.

ஆட்சியர்: நீரா பானம் இறக்குவது தொடர்பான நடைமுறைகளை தளர்த்த வேண்டும் என விவசாயிகள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கையெடுக்கப்படும்.

வையாபுரி: பரமத்திவேலூர் ராஜ வாய்க்கால் பகுதியில் வெள்ளப்பெருக்கால் சேதமடைந்து தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட பகுதிகளை, நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கையெடுக்க வேண்டும். பரமத்தி வேலூர் பகுதிகளில் உள்ள வெல்ல ஆலைகளில் கலப்படத்தை தடுக்க நடவடிக்கையெடுக்க வேண்டும்.

ஆட்சியர்: வெல்ல ஆலைகளில் கலப்படத்தை தடுக்க குழு அமைத்து கண்காணிக்கப்படும். சேதமடைந்த வாய்க்கால் கரைகள் விரைவில் சீரமைக்கப்படும்.
அண்ணாமலை:மரவள்ளிக்கிழங்குக்கு கட்டுபடியாகும் விலை கிடைக்க, மாவட்ட நிர்வாகம் முத்தரப்பு கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும்.

Tags:

Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் | Tamil Daily News | தமிழ் நாளிதழ் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!