TTV Dinakaran’s rule in Tamilnadu is convinced: thanga.tamilselvan

தமிழகத்தில் அதிமுக தொண்டர்கள் நுாறு சதவீதம் பேர் டிடிவி தினகரன் பக்கம் உள்ளனர். டிடிவி தினகரன் தமிழகத்தில் ஆட்சி செய்வது உறுதியாகிவிட்டது, என, அதிமுக அம்மா அணியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் பேசினார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், திருவாடானை, முதுகுளத்துார், பரமக்குடி தொகுதிகளில் அதிமுக அம்மா அணி நிர்வாகிகள் நியமித்தல், பொறுப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் கக்ஷட்டம் நடந்தது. ராமநாதபுரம் சட்டசபை தொகுதியில் நடந்த கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் பேசியதாவது:

கட்சியில் மாணவரணி, இளைஞர்கள் அணி, இளம்பெண் பாசறை, வக்கீல் அணி, விவசாய அணி, அண்ணா தொழிற்சங்கம், மீனவரணி, விவசாய அணி என அணிவாரியாக பிரித்து பொறுப்பாளர்கள் ஒரிரு தினங்களில் நியமித்து நகரம், ஒன்றியம், தொகுதி, மாவட்டம் வாரியாக கூட்டம் நடத்துங்கள். ஏற்கனவே இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை என்பதை தற்போது இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இளைஞர் தனியாகவும், இளம் பெண் பாசறை தனியாகவும் பிரித்து நிர்வாகிகள் நியமியுங்கள்.

தற்போது கட்சியின் தொண்டர்கள் நம்பக்கம் வரத்தொடங்கிவிட்டனர். தொண்டர்கள் மட்டுமின்றி மக்களும் நம்பக்கம்தான் உள்ளனர். சமீபத்தில் டிடிவி தினகரனுடன் தஞ்சாவுர் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். அப்போது நாங்கள் கடைசியாக சென்ற இடத்திற்கு செல்லும் போது இரவு 1.30 மணியாகிவிட்டது. அந்த நேரத்திலும் சுமார் 15 ஆயிரம் பேர் மக்கள் அண்ணன் டிடிவியின் பேச்சை கேட்க ஆவலாக திரண்டு நின்று இருந்தனர். அந்தளவு சென்ற இடமெல்லாம் மக்கள் நம்பக்கம் வருவதை காணமுடிகிறது.

இதிலிருந்து விரைவில் டிடிவி தினகரன் ஆட்சி அமைய உள்ளது உறுதி என்பது தெளிவாகவிட்டது. அதற்காகத்தான் பொறுப்பாளர்கள் நியமித்து சரியான வழியில் வழிநடத்தி செல்கிறோம். இதன்முலம் இன்னும் 50 ஆண்டுகள் நம்மை யாரும் அசைக்க முடியாது. அதிமுகவில் உள்ள தொண்டர்கள் நுாறு சதவீதம்பேரும் நம்பக்கம் வந்துவிட்டனர். இதனால் அண்ணன் டிடிவி தினகரன் செல்வாக்கு உயர்ந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை நான்கு தொகுதிகளிலும் டிடிவி தினகரன் ஆதரவு அமோகமாக உள்ளதை காணமுடிகிறது. இந்த மாவட்டம் டிடிவி தினகரனின் அன்புக்கு கட்டுப்பட்ட மாவட்டமாக மாறியுள்ளது.

மாநில அரசு ராஜினாமா செய்ய வேண்டும்

சட்டசபையில் அம்மா ஜெயலலிதா படம் திறக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் டிடிவி தினகரன் பங்கேற்கவில்லை என தெரிவிக்கின்றனர். நான் கேட்கிறேன். இதுவரை, எம்ஜிஆர், அண்ணா, காமராஜர் உள்ளிட்டோர் படங்களை பிரதமர், ஜனாதிபதி போன்றோர் வந்து திறந்து வைத்துள்ளதாகத்தான் வரலாறு.

அதிமுக இந்தியாவின் முன்றாவது பெரிய கட்சி என உருவாக்கிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை நாட்டின் பிரதமர் அல்லது ஜனாதிபதி அல்லது துணை ஜனாதிபதி கொண்டு திறந்து கவுரவித்திருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட ஒரு சபாநாயகரை கொண்டு சிம்பிளாக அதுவும் அவசரமாக திறந்ததின் நோக்கம் என்ன? மத்திய அரசை அழைக்காமல் அவசரமாக திறந்ததன்முலம் மக்களை ஏமாற்றியுள்ளனர். இதற்கு பொறுப்பேற்று மாநில அரசு ராஜினாமா செய்ய வேண்டும். தமிழக அரசு தற்போது கேவலமாக செயல்படுகிறது, என பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் வாரியத்தலைவர் முனியசாமி வரவேற்றார். முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன், மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் முத்தையா, மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த், ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் ஜெயசந்திரன், மாநில மகளிரணி செயலளர் கவிதா சசிகுமார், ஒன்றிய செயலாளர் முத்தீஸ்வரன், நகர் செயலாளர் ரஞ்சித்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் தவமுனியசாமி, செல்வம், கமல் உட்பட பலர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து மற்ற 3 தொகுதிகளிலும் ஆலோசனை கூட்டம் நடந்தது.
செய்தி: இ.சிவசங்கரன், ராமநாதபுரம்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!