What are the crops grown in the rainy season – the Department of Agriculture
வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சந்திரன் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில், தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இம்மழையினைப் பயன்படுத்தி நடப்பு பருவத்தில், நெல் சாகுபடிக்கு ஏற்ற நெல் இரகங்களான CO-50, CO-51, ADT.50, ADT-45 மற்றும் உளுந்து சாகுபடிக்கு ஏற்ற இரகங்களான சேகர்-1, வம்பன்-5, வம்பன்-6 ஆகியவை வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நெல்லுக்கு கிலோவிற்கு ரு.10- மானியமும், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உளுந்திற்கு கிலோவிற்கு ரூ.25- மானிய விலையில் வழங்கப்படுகிறது.
மேலும், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் மூலம் உளுந்து செயல்விளக்கம் அமைக்க ஹெக்டேருக்கு ரூ.5,000-மும், மக்காச்சோளம், உளுந்து பயிர் சுழற்சி செயல்விளக்கம் அமைக்க ஹெக்டேருக்கு ரூ.10,000-மும் மான்யமாக வழங்கப்படுகிறது.
தேசிய வேளாண் வளர்ச்சித் திட்ட இயக்கத்தின் கீழ் நெல் இயந்திர நடவு செயல்விளக்கம் அமைக்க ஹெக்டேருக்கு ரூ.5000-மும் மான்யம் வழங்கப்படுகிறது.
நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்களின் வரப்புகளின் ஓரத்தில் உளுந்து பயிரிடுவதன் மூலம் கூடுதல் வருமானமும் நன்மை செய்யும் பூச்சிகளின் எண்ணிக்கையும் பெருக்க முடியும். எனவே, விவசாயிகள் தங்களின் நெல் வயலின் வரப்புகளில் உளுந்து, பச்சைப்பயறு ஆகிய பயிர்களை பயிரிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விவசாயிகளின் விதை மற்றும் இடுபொருள் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள், பிரதி வாரம் சனிக்கிழமையும் செயல்படும். இதுகுறித்து மேலும் விபரங்களுக்கு விவசாயிகள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகலாம், என தெரிவித்துள்ளார்.