Perambalur: 50% subsidy for micro, small and medium enterprises installing new machinery and equipment; Collector’s information!
குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மின் ஆற்றல் மற்றும் எரிசக்தி சேமிப்பினை ஊக்குவிக்கும் விதமாக “எரிசக்தி கணக்கீடு மற்றும் எரிசக்தி சேமிப்பு” என்ற திட்டத்தினை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. எரிசக்தி கணக்கீடு அறிக்கைக்கான செலவினத்தில் 75 விழுக்காடு, அதிகபட்சமாக ரூ. 1,00,000/- க்கு மிகாமல் அரசு மானியமாக வழங்குகிறது.
தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் புதிதாக நிறுவப்படும் தகுதியுள்ள இயந்திர தளவாடங்களுக்கு அவற்றின் மதிப்பில் 50 விழுக்காடு மானியம் அதிகபட்சமாக ரூ.10,00,000/- வரை மானிய தொகை வழங்கப்படும். தணிக்கை அறிக்கை பெறப்பட்ட நாளிலிருந்து 3 மாதங்களுக்குள் அல்லது தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் புதிதாக இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் நிறுவப்பட்ட நாளிலிருந்து ஒரு ஆண்டிற்குள் மாவட்டதொழில் மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் காப்புரிமைக்கான விண்ணப்பம் பதிவு செய்யும் செலவில் 75 விழுக்காடு மானியம் அதிகபட்சமாக ரூ.3,00,000/- வரை வழங்கப்படும். குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் புவி சார் குறியீடுக்கான விண்ணப்பம் பதிவு செய்யும் செலவில் 50 விழுக்காடு மானியம் அதிகபட்சமாக ரூ.1,00,000/- வரை வழங்கப்படும்.
குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பத்திர பதிவு துறையில் மேற்கொள்ளும் நில பதிவில் முத்திரை தாள் கட்டணம் மற்றும் பதிவு கட்டண மானியம் அதிகபட்சமாக 50 விழுக்காடு வரை வழங்கப்படும். சிறு, நடுத்தர நிறுவனங்கள் பங்குச் சந்தையில் தங்களது நிறுவனத்தை பட்டியலிட செலவிடப்பட்ட தொகையில் 20 விழுக்காடு அதிகபட்சமாக ரூ.5,00,000/- வரை ஒரு முறை உதவித் தொகையாக வழங்கப்படும்.
பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த ஆர்வமுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற https://msmeonline.tn.gov.in/incentives என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யலாம் அல்லது உரிய ஆவணங்களுடன் பொது மேலாளர், பெரம்பலூர் மாவட்ட தொழில் மையம், அல்லது: 04328-225580 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விண்ணப்பித்து பயனடையுமாறு கலெக்டர் கிரேஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.