Perambalur: Dhanalakshmi Srinivasan Sugar Mill takes action to pay the dues to farmers as soon as possible; DRO confirms!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் டி.ஆர்.ஓ வடிவேல் பிரபு தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். ராமராஜன்: கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு கடன் வழங்க சிபில் ஸ்கோர் கணக்கீட்டு முறையை ரத்து செய்திட வேண்டுமெனவும், நூறு நாள் வேலை திட்டம் விவசாயிகள் பயிரிடும் காலங்களை தவிர்த்து மற்ற மாதங்களில் வேலை நடைபெற வேண்டுமெனவும்,
ஜெயராமன்: பெரம்பலூர் மாவட்டத்தில் திருமணம் நடைபெறும் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் அனைத்து கோவில்களிலும் கழிப்பறை வசதிகள் செய்து தர வேண்டுமெனவும், பெரம்பலூரில் தட்டுப்பாடின்றி குடிதண்ணீர் வழங்க வேண்டுமெனவும், ராஜு: விவசாயிகளுக்கு கோடை உழவு மானியம் மற்றும் மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். நீலகண்டன்: விவசாயிகளுக்கு தக்கைப்பூண்டு விதைகள் அதிகமாக வழங்க வேண்டுமெனவும், விதை நெல்லிற்கு உற்பத்தி மானியம் வழங்க வேண்டுமெனவும், வேல்முருகன்: மின்கம்பங்கள் சீர்செய்து வேண்டுமெனவும், குடி தண்ணீர் இணைப்பை விவசாயத்திற்கு பயன்படுத்துவதை தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்,
ஏ.கே.ராஜேந்திரன்: மக்காச்சோளத்திற்கு பயிர் காப்பீடு வழங்க வேண்டுமெனவும், பாதை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், ஆர்.ராஜா சிதம்பரம்: வீடு கட்டுவதற்கு கிராவல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டுமெனவும், ராஜா: தெரணி பகுதியில் சோலார் மின் விளக்குகள் மற்றும் சிசிடிவி கேமரா ஆகியவை பராமரிப்பின்றி உள்ளதால் அவற்றை சீர் செய்திட வேண்டுமெனவும்,
விநாயகம்: தெரணி பகுதியில் சாலை சீரமைத்து தர வேண்டுமெனவும், மயான பகுதியில் தண்ணீர் வசதி செய்து தர வேண்டுமெனவும், சத்தியசீலன்: புதுவேட்டக்குடி பகுதியில் பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமெனவும்,
வரதராஜன்: விவசாயிகள் சாகுபடி செய்யும் நிலப்பரப்பிற்கு ஏற்றவாறு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், காமராஜ்: ஒகளூர் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், விவேகானந்தன்: அரும்பாவூர் பேரூராட்சியில் சாலை சீரமைக்க வேண்டுமெனவும், சதாசிவ அணைக்கட்டு சீரமைக்க வேண்டுமெனவும் மணி: பொம்மனப்பாடி ஏரி வாய்க்கால் சீரமைக்க வேண்டுமெனவும், மங்கூன் பாதை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டுமெனவும், ராமராஜ்: தெரணி பகுதியில் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டுமெனவும்,
செல்லதுரை: கறவை மாட்டிற்கு பராமரிப்பு லோன் வழங்க வேண்டுமெனவும் இலவச மின் இணைப்பு இலக்கீடு தொடர்பாக விபரம் வழங்க வேண்டுமெனவும், முத்துராமன்: அ.மேட்டூர் பகுதியில் உள்ள உலர்களம் சீரமைப்பு பணிகள் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு நிலுவைத்தெகையை விரைவில் வழங்க வேண்டுமெனவும், பால் உற்பத்தியாளர்களுக்கு காப்பீட்டு தொகை வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.
அனைவரின் கோரிக்கைகளையும் கேட்டறிந்த சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பதில் அளித்தனர். பின்னர், டி.ஆர்,ஓ தெரிவித்தாவது: கடந்த மாத கூட்டத்தில் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கிய அனைத்து விவசாயிகளுக்கும் உரிய விளக்கம் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, இந்த மாத கூட்டத்தில் பெறப்படும் கோரிக்கை மனுக்களுக்கான தீர்வும், உரிய பதிலும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் வழங்கப்படும். தனலட்சுமி சீனிவாசன் சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் தனிநபர் இல்லங்களில் சோலார் மூலம் மின் உற்பத்தி செய்யும் திட்டத்தினை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு கடன் வழங்குவதில் உள்ள பிரச்சினைகளை தீர்த்திட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தின் வருடாந்திர சராசரி மழையளவு 861 மி.மீ, ஆகும். 2025 ஜூன் மாதம் பெய்ய வேண்டிய மழையளவு 32.00மி.மீ., பெய்த மழையளவு37.36மி.மீ, ஆகும். 2025 ஜூன் வரை பெய்ய வேண்டிய மழையளவு 157மி.மீ., பெய்த மழையளவு 204.19மி.மீ, ஆகும். விதை கொள்முதலை பொறுத்தவரை விவசாயிகள் பயன்பாட்டிற்காக நெல்லில் 41.725 மெ.டன்களும், சிறுதானியங்களில் 8.952 மெ.டன்கள் இருப்பில் உள்ளதாகவும், பயறு வகைகளில் 2.768 மெ.டன்களும், எண்ணெய் வித்து பயிர்களில் 6.103 மெ.டன்களும் இருப்பில் உள்ளது என்றும் அறிவிப்பு செய்யப்பட்டது,
இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் செ.பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வே.) பொ.ராணி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) செல்வம், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் அசோக் குமார் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.