Perambalur: Driver escapes with sand-smuggling lorry from revenue department; Case registered against 5 people including ruling party leader!
பெரம்பலூர் மாவட்டம், மருதையாற்றில் இருந்து அனுமதியின்றி லாரிகளில் மணல் கடத்தி ஏற்றி செல்லப்படுவதாக ஆலத்தூர் தாசில்தார் அலுவலகத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின், பேரில், புஜங்கராயநல்லூர் அருகே உள்ள மருதையாற்றில் வருவாய் துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை மடக்கி நிறுத்தி, சோதனையிட்டதில், உரிய அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது உறுதியானது. வருவாய்த்துறை அதிகாரிகள், குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வருவதற்குள் வருவாய் துறையினரை மீறி மணல் லாரியில் இருந்த மணலை ஆற்றில் கொட்டிய டிரைவர், லாரியை எடுத்து தப்பி சென்று விட்டார். லாரியின் பின்னால் பைக்கில் வந்த ஒருவரும் தப்பிச் சென்றார்.
இதுகுறித்து வி.ஏ.ஓ கிருத்திகா குன்னம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணையில் புஜங்கராயநல்லூர் கிராமத்தை சேர்ந்த திமுக பிரமுகர் காட்டுராஜா உள்பட 5 பேர் தான் மணல் ஏற்றி வந்தது என உறுதி செய்த போலீசார் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனனர்.
இந்நிலையில், திமுக பிரமுகர் காட்டுராஜா சார்பில், அவரது வக்கீல் ஒருவர் குன்னம் காவல் புகார் மனு அளித்தார். அதில், வருவாய் துறையினர் தொகையை பெற்றுக் கொண்டு லாரியை விடுவித்தாகவும் தெரிவித்துள்ளார். இந்த இரு புகார்கள் மீதும் குன்னம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.