Perambalur: Gold jewelry weighing 86 sovereigns (worth ₹1 crore) and ₹4.40 lakh in cash stolen from two different locations!

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் பாளையம் கிராமத்தில் போஸ்ட் ஆபீஸ் எதிரே வசித்து வருபவர் ஆரோக்கியராஜ் மனைவி தேவ சகாய சுந்தரி என்கிற ராஜலட்சுமி (60). இவர் திருச்சி மாவட்டம் புதூர் பாளையம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவருக்கு செர்லின் (33), (விஜய் டிவி புகழ் பாடகி) என்ற ஒரு மகளும், எட்வர்ட் சகாயராஜ் (30), என்ற ஒரு மகனும் உள்ளனர்.

மகள் திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார். மகன் இன்ஜினியரிங் முடித்துவிட்டு சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2006 ஆம் ஆண்டு வயது மூப்பினால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு ராஜலட்சுமியின் கணவர் ஆரோக்கியராஜ் உயிரிழந்து விட்ட நிலையில், தனியாக வசித்து வந்த, மகள் வழி பேத்தி உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டதை அறிந்து கடந்த 10-ம் தேதி ராஜலக்ஷ்மி சென்னைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் பாளையம் கிராமத்தில் உள்ள ராஜலட்சுமியின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோ திறந்து கிடப்பதை உறவினர்கள் உள்ளிட்ட அக்கம் பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைந்து ராஜலட்சுமிக்கும் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சென்னையில் இருந்து பெரம்பலூர் நோக்கி ராஜலட்சுமி பதறி அடித்துக் கொண்டு பெரம்பலூர் நோக்கி பிரயாணப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், சம்பவ இடத்தை பெரம்பலூர் ரூரல் போலீசார் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட ஆய்வு மற்றும் விசாரணையில், மகனின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த 80 பவுன் தங்க நகைகளும் பல லட்ச ரூபாய் ரொக்க பணமும் திருடு போனது தெரிய வந்திருக்கிறது. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்
ராஜலட்சுமி பெரம்பலூர் வந்த பின்னர் தான் பறிபோன பொருட்களின் உண்மையான மதிப்பு தெரிய வரும் என போலீசார் தெரிவித்து வருகின்றனர். ஊருக்கு நடுவே குடியிருப்பு பகுதியில் நிகழ்ந்த இந்த துணிகர திருட்டு சம்பவம் குரும்பலூர் பாளையம் கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதே போல, பெரம்பலூர் மாவட்டம் ஆதனூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி சின்னம்மாள் (47). இவர்களுடன் காமராஜின் தாயார் பச்சையம்மாளும் வசித்து வருகிறார். வீட்டின் வரவு-செலவு கணக்குகளை பச்சையம்மாள் கவனித்து வந்தார். இவர்கள் 15 ஏக்கர் நிலத்தில் விளைந்த முத்துச்சோளத்தை சேமித்து வைத்து, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பெரம்பலூரில் விற்பனை செய்துள்ளனர். இதன் மூலம் கிடைத்த ரூ.6 லட்சத்து 30 ஆயிரத்தில், கடன்கள் மற்றும் குடும்ப செலவுகள் போக மீதமிருந்த ரூ.4 லட்சத்து 40 ஆயிரத்தை வீட்டில் உள்ள அலமாரியில் பச்சையம்மாள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 23-ம் தேதி காலை காமராஜ், அவரது மனைவி சின்னம்மாள், பச்சையம்மாள் ஆகிய 3 பேரும் வழக்கு தொடர்பாக பெரம்பலூர் கோர்ட்டுக்கு சென்றனர். பின்னர் மதியம் வீட்டுக்கு திரும்பினர்.

நேற்று மாலை காமராஜ் தனது இளைய மகன் ஆதிராஜனுக்கு விடுதி கட்டணம் செலுத்த பணம் தேவைப்படுவதால், அலமாரியில் உள்ள பணத்தை எடுத்து வைக்குமாறு பச்சையம்மாளிடம் கூறிவிட்டு, தனது மனைவி சின்னம்மாளுடன் காட்டுக்கு சென்றுவிட்டார். இதையடுத்து பச்சையம்மாள் அலமாரியை பார்த்தபோது, அதன் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே வைத்திருந்த ரூ.4 லட்சத்து 40 ஆயிரம் மற்றும் 5½ பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. மேலும், வீட்டின் அருகே சுத்தியல் மற்றும் இரும்பு பைப் கிடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பச்சையம்மாள், மாலை 7 மணியளவில் வீட்டுக்கு வந்த மகன் காமராஜிடம் தெரிவித்தார். திருட்டு போன நகைகளில் 2 ஜோடி தோடுகள் 1½ பவுனும், 2 வளையல்கள் 4 பவுனும் அடங்கும். இதுகுறித்து மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில், ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான தங்க நகைகள் ரொக்கம் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!