Perambalur: Grama Sabha meetings to be held in all village panchayats; Collector informs!

பெரம்பலூர் மாவட்டத்தில் 26.01.2026 குடியரசு தினத்தன்று 121 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. கிராம சபைக் கூட்டத்தில் அனைத்து கிராம சபை உறுப்பினர்களும் தவறாது கலந்து கொண்டு, கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கண்டறிதல் வேண்டும். அரசு நலத்திட்டங்களை கூட்டத்தில் வழங்குதல் வேண்டும். அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மக்களிடையே கேட்டறிதல் வேண்டும்.

கிராம சபைக் கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2026-27-ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சி திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல், தொழிலாளர் வரவு-செலவு திட்டம், தொழிலாளர் வரவு-செலவு திட்ட பணிகள், நலிவு நிலை குறைப்பு நிதி, தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், ஜல் ஜீவன் திட்டம், சிறுபாசன ஏரிகள் புதுப்பித்தல் குறித்த விவரம், தொகுதி மேம்பாட்டு திட்டம், தமிழ் நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் செயல்பாடுகள், மறுசீரமைக்கப்பட்ட ராஷ்ட்ரிய கிராம ஸ்வராஜ் திட்டம் ஆகிய கூட்டப் பொருட்கள் பற்றி விவாதிக்க வேண்டும்.

மேற்கண்ட கூட்டப் பொருட்களுடன் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு சட்டத்தை மாற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான கூட்டம் பொருட்களும் இணைத்து விவாதிக்க வேண்டும்.

இக்கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராம சபா உறுப்பினர்கள் (கிராம ஊராட்சி வாக்காளர்கள்) அனைவரும் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து துறை வாரியான அலுவலர்கள் தவறாது கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொள்வதோடு, துறை தொடர்பான திட்டங்கள் பொதுமக்கள் நன்கு அறியும் வகையில் கூறிட வேண்டும். கிராம சபைக்கூட்டம் நல்ல முறையில் நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வட்டாரம் வாரியாக மாவட்ட நிலை அலுவலர்கள் மண்டல அலுவலர்களாக கிராம சபைக்கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அனைத்து வட்டாட்சியர்களும் தங்களது எல்லைக்குட்பட்ட கிராம ஊராட்சிகளின் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு, கூட்ட நடவடிக்கைகளை பதிவு செய்ய வேண்டும்.

கிராம சபை உறுப்பினர்களாகிய வாக்காளர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கும், ஆக்கப்பூர்வமான ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சிகளின் இதர பொருட்கள் குறித்தும் விவாதித்திட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும், என கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!
Enable Notifications OK No thanks