Perambalur: I am retiring from politics; I am not joining any party! R.T. Ramachandran’s interview!

முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் திமுகவில் இணைந்ததை தொடர்ந்து, அவரது ஆதரவாளர் முன்னாள் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன் வரும் ஜன.26ம் தேதி திமுகவில் இணைவதாக நேற்று அறிவித்து இருந்த நிலையில் இன்று தீடீரென மனஉறுத்தல், குடும்பத்தினர் அதிருப்தியாலும், அதிமுகவை விட்டு மாற்று கட்சிக்கு செல்லக் கூடாது வலியுறுத்தியதால் வேறு எந்த கட்சிக்கும் செல்வதில்லை என்றும், அரசியல் பொது வாழ்க்கையில் இருந்து இன்று முதல் விலகுவதாக அறிவித்தார். அப்போது, அஇஅதிமுக (OPS அணி) பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
நேற்றைய தினம் நாங்கள் எடுத்த ‘திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) இணைவது’ என்ற முடிவில், நேற்று எனது இல்லத்தில் குடும்ப உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பும், அதனால் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாகவும், எனது உடல்நலத்தின் மருத்துவர் ஆலோசனையின் காரணமாகவும் நான் இன்று மாற்று முடிவை எடுத்திருக்கிறேன்.
இல்லத்தார்கள் ஆலோசனைக்கிணங்க, மருத்துவர்களின் ஆலோசனைக்கிணங்க, நான் பொது வாழ்க்கையிலிருந்து விலகிக்கொள்வது என்ற முடிவை எடுத்திருக்கிறேன். நேற்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு என்பது தவறான விஷயம் என்றபோதிலும், என் உடல்நிலையைக் கருத்தில் கொண்டும், என் குடும்பச் சூழ்நிலை, குடும்ப உறுப்பினர்களின் அறிவுறுத்தல் மற்றும் குடும்ப நிம்மதிக்காக நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். நான் எந்த அரசியல் கட்சியிலும் இனி பயணிக்கப் போவதில்லை. தயவுகூர்ந்து அண்ணன் வைத்திலிங்கம் அவர்களும், என்னோடு இத்துடன் பயணித்த கழகத் தொண்டர்களும் என்னை மன்னித்து, என்னோடு இதுவரை உறுதுணையாக இருந்த கழகத் தொண்டர்கள் அவரவர் விரும்பும் கழகத்தில் இணைந்து பணியாற்றுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
கேள்வி: உங்களோட அறிவிப்பை முதல்ல நீங்க திமுக-ல இணையுறேன்னு சொன்னப்போ, உங்க வீட்டாரோட மனநிலை எப்படி இருந்துச்சுங்க?
பதில் : காலையில வந்து அமைச்சர் ஆர்.வி. அண்ணன்கிட்ட முடிவெடுத்ததா அவர் சொன்னப்ப, நான் அவர்கிட்ட சில விஷயங்களைப் பேசுனப்ப அமைதியா இருந்தாங்க எங்க வீட்டுல. ஒன்னும் பெரிய எதிர்ப்பு இல்ல. ஆனா நான் இங்க வந்துட்டு எல்லாத்தையும் கூட்டம் எல்லாம் முடிச்சுட்டு நான் வீட்டுக்குப் போறப்ப ஒட்டுமொத்த குடும்பமுமே என் வீட்டுல குழுமியிருந்தாங்க. நான் எங்க அக்காமார்லாம் கூட, வெளியில கல்யாணம் பண்ணிக் கொடுத்த அக்காமார்லாம் கூட வந்திருந்தாங்க. அக்கா புள்ளைங்க வந்திருந்துச்சு. ஒட்டுமொத்த குடும்பமும் அந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிச்சு, 2 விஷயங்கள் என் மனசை ரொம்ப வாட்டியது.
என்னைப் பெற்றெடுத்த தாய், புரட்சித் தலைவி அம்மாவின் படத்தை வீட்டிலிருந்து, அலுவலகத்திலிருந்து அகற்றுவாயா? என்று கேட்டதும், ‘எனக்கு அசிங்கமாக இருக்கிறது, இதெல்லாம் வேலையாப்பா? என்று என் பொண்ணு கேட்டதும் எனக்கு மிகுந்த வேதனை அளித்தது. இரவு முழுவதும் என்னால் உறங்க முடியவில்லை. காலையில் வீட்டாருடனும் சொல்லிவிட்டு இந்த முடிவை தெளிவாக எடுத்திருக்கிறேன் என கண் கலங்கினார்.










kaalaimalar2@gmail.com |
9003770497