Perambalur: Loyalty to the leader; Following Vaithilingam, RTR, a loyalist of AIADMK and Amma, joins the DMK!

பெரம்பலூரில் முன்னாள் திமுக அமைச்சர் ஆ.ராசாவை எதிர்த்து அரசியல் செய்து அதிமுகவில் நகர செயலளார், நகராட்சி துணைத் தலைவர், மாவட்ட செயலாளர், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ என களம் கண்டவர் பெரம்பலூர் அரணாரையை ஆர்.டி.ராமச்சந்திரன். திமுக எதிர்க்கட்சியாக இருந்த போதும், ஆளும் கட்சியாக இருந்த போதும் டஃப் பைட் கொடுத்தவர். தற்போது காலச்சக்கரம் சுழற்சியால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி வரவேற்று தகவல் தெரிவித்தும் தன்னை வளர்த்து ஆளாக்கிய முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் ஒற்றை சொல்லுக்காக OPS அணியில் காத்துகிடந்தார். OPS முடிவுகளை எடுப்பதில் தாமதம் காரணமாக இன்று அதிமுகவின் விசுவாசி முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு இன்று திமுக வில் இணைத்துக் கொண்டார். தனது சிஷ்யனான RTR-இடம் நீயும் வருவாய் என வாக்குறுதி கொடுத்திருக்கிறேன் காப்பாற்று என்ற ஒற்றை சொல்லுக்காக கணத்த இதயத்துடன் திமுகவில் இணைவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2006 ல், பழைய நகராட்சி ஆபீஸ் அருகே இருந்த ஆர்டிஆர் அலுவலகத்தை திமுக தாக்கி நொறுக்கி எதிர்ப்பு தெரிவித்தனர். அதிலிருந்து முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் ஆதரவில் பெரிய அளவில் ஆ.ராசா விற்கு எதிராக வளர்க்கப்பபட்டார். அந்த காலக்கட்டத்தில் திமுக VS அதிமுக இரண்டும் உக்ரைன் VS ரஷ்யா போர் போல அரசியல் நடந்து கொண்டிருந்தது.

இது குறித்து R.T.ராமச்சந்திரன் நிருபர்களை சந்தித்த போது அளித்த பேட்டி;

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவில் பயணித்து வந்த நான், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் மனமிறங்கியும், இந்தக் கழகத்தின் நலன் கருதியும், பிரிந்து சென்றவர்களை எல்லாம் ஒன்று சேர்த்து கழகத்தை வலுவோடும், பொலிவோடும் நடத்துவார், எங்களையெல்லாம் இணைத்துக் கொண்டு கட்சியை வலுப்படுத்துவார் என்ற முழு நம்பிக்கையோடு இந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக ஒருங்கிணைப்பாளர் ஐயா ஓ. பன்னீர்செல்வம் அவர்களும், இணை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஆர். வைத்திலிங்கம் அவர்களும், அவர்களோடு நாங்களும் பயணித்து வந்தோம்.

​இந்த நிலையில், கடந்த 23.12.2025 அன்று ஒன்றுகூடி கழகத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நம்மை இணைத்துக் கொள்ளாத பட்சத்தில் என்ன முடிவு எடுக்கலாம் என்ற ஆலோசனையை கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஐயா ஓ.பி.எஸ் அவர்கள் எங்களிடம் கருத்து கேட்டிருந்தார். நாங்கள் எல்லாம் அவரவர் கருத்துக்களைக் கூறியிருந்த நிலையில், திரு. ஓ. பன்னீர்செல்வம் ஐயா அவர்கள் எந்த முடிவையும் எங்களுக்குத் தெரிவிக்காமலும், மீண்டும் தேர்தல் தேதி நெருங்கிவிட்டது, கூட்டணிகள் முடிந்துவிட்டது, டெல்லியில் அமித்ஷா அவர்களைச் சந்தித்த திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள், ஓ. பன்னீர்செல்வம், ஆர். வைத்திலிங்கம், திருமதி.சசிகலா ஆகியோரை கட்சியில் இணைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று இறுதியாக அவர் அறிவித்ததன் அடிப்படையில், மீண்டும் மௌனத்தைக் காத்து, தாமதத்தையும், தடுமாற்றத்தையும் நாங்கள் ஐயா ஒ.பன்னீர்செல்வம் அவர்களிடத்தில் தெரிந்து கொண்டதன் அடிப்படையில் எனக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அம்மாவிடம் அழைத்துச் சென்று, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டக் கழகச் செயலாளராக, குன்னம் சட்டமன்ற வேட்பாளராக, குன்னம் சட்டமன்ற உறுப்பினராக ஆகுன்ற வாய்ப்பை இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மாவிடம் பெற்றுத் தந்த திரு. அண்ணன் வைத்திலிங்கம் அவர்கள் எங்களை அழைத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைவதாக எங்களிடம் தெரிவித்தார்.

​அதன் அடிப்படையில் அவர் இன்று காலை தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக முதலமைச்சர் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் முன்னிலையில் தன்னை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டார். 26.01.2026 அன்று தஞ்சையில் நடக்கின்ற நிகழ்வில் நாங்களும் திரு. அண்ணன் வைத்திலிங்கம் அவர்களைத் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைவது என்ற முடிவை எடுத்திருக்கிறோம். ஆகையால் வரும் ஜன.26 அன்று நானும் என்னைச் சார்ந்தவர்களும், இங்கிருக்கக்கூடியவர்களும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் எங்கள் அண்ணன் வைத்திலிங்கம் முன்னிலையில், முதலமைச்சர் தி.மு.க தலைவர் தலைமையில் எங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளோம்.

​கேள்வி: பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து எத்தனை பேர் இணைப்பில் இருக்கப் போகிறீர்கள்? கட்சிக்காரங்க எத்தனை பேர் வருவாங்க?

​பதில் (RTR) : இங்கு பொறுப்பாளர்கள் ஒரு 10 பேர் முடிவு பண்ணிப் பேசி இருக்காங்க. சில பேர் மீண்டும் தாய்க்கழகத்துக்கு நாங்க வெயிட் பண்ணப் போறோம்னு சொல்லிருக்காங்க. அவங்களைத் தவிர பொறுப்பாளர்களோடு நாங்க வந்து அதிகபட்சம் ஒரு 250 முதல் 300 பேர் அன்று இணைவோம், பொறுப்பாளர்கள் மற்றும் கிளைப் பொறுப்பாளர்கள்.

​கேள்வி: இப்ப சசிகலா என்ன சொல்லிருக்காங்கன்னா, வைத்திலிங்கத்துடைய முடிவை அவங்க தொகுதி மக்கள் ஏற்க மாட்டார்கள் அப்படிங்கற மாதிரி சொல்லிருக்காங்களே?

​பதில்: அது தேர்தல்ல தான் தெரியும், அவங்க தொகுதி மக்கள் என்ன முடிவெடுப்பாங்கன்னு தெரியும். அம்மையார் அவர்கள் முடிவெடுக்குற இடத்துல இல்லை. தொகுதி மக்கள் இன்னைக்கு வரைக்கும் அவரை ஏத்துக்கிட்டு இருக்காங்க. அவர் வந்து தொடர்ச்சியா அங்க வெற்றி பெற்றுட்டு இருக்காரு. இந்த முடிவு என்னன்றதை மக்கள் சசிகலாவுக்கும், எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் கட்டாயம் காட்டுவார்கள்.

​கேள்வி: நீங்க மக்கள் நலன் கருதி இணையுறீங்களா? இல்ல உங்க சொந்த நலனுக்காகவா?

​பதில்: அரசியல், ஒரு அரசியல்வாதியாக பொது வாழ்க்கையில் இருக்கக்கூடிய எந்த ஒரு அரசியல்வாதியும் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற பொது நோக்கோடு தான் அரசியலில் பயணிக்கிறோம். அந்தப் பட்சத்தில் என்னை நான் அண்ணா தி.மு.க-வில் இணைத்துக் கொண்டு, புரட்சித்தலைவி அம்மாவின் தலைமை ஏற்று 1997-ல் எதிர்க்கட்சியாக இருந்த பொழுது இந்தக் கட்சியில் இணைந்து, கட்சியில் செயலாற்றி, அம்மாவிடம் நல்ல பெயர் எடுத்து, அண்ணன் வைத்திலிங்கம் அவர்களின் ஆதரவோடு அம்மாவிடம் அறிமுகப்படுத்தப்பட்டு நான் நகரக் கழகச் செயலாளராக, மாவட்டக் கழகச் செயலாளராக, குன்னம் சட்டமன்ற உறுப்பினராக மக்கள் சேவை செய்தேன். அது இப்ப தொடர முடியாத வாய்ப்பு.

​ஒரு அரசியல்வாதியா இருக்குறவன் பொது வாழ்க்கையில மக்கள் சேவை செய்யணும், மக்களுக்கு நலன் செய்யணும்னா ஏதேனும் ஒரு அமைப்பிலிருந்து தான் செஞ்சாகணும். அது எடப்பாடி பழனிசாமியில அண்ணா தி.மு.க-வில தொடருவோம்னு இறுதி வரை காத்திருந்து, கதவுகள் அடைக்கப்பட்டு, அண்ணா தி.மு.க-வில இனி எனக்கும் அண்ணன் ஆர். வைத்திலிங்கம் அவர்களுக்கும் வாய்ப்பில்லை என்று முடிவான பிறகு, ஒரு அரசியல்வாதியாகப் பொது வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென்றால் ஒரு அமைப்பில் நாங்கள் சேர்ந்து செயல்பட வேண்டும். அந்த வகையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், தி.மு.க-வும் தான் தமிழகத்தில் மக்களுக்குச் சேவை செய்யக்கூடிய கட்சிகளாக மாற்றி மாற்றி ஆட்சியில் அமர்ந்து மக்களுக்குச் சேவை செய்து வர்றாங்க. இதுல நிறைவு, குறைவு 2 கட்சிகளிலும் இருக்கலாம். ஆகையால் ஒரு அரசியல்வாதிக்கு மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்றால் பொது வாழ்க்கையில் ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்திருக்க வேண்டும். அப்படி நான் தேர்ந்தெடுக்கக்கூடிய அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் என தெரிவித்தார். அப்போது அவரது ஆதரவாளர்கள் பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!
Enable Notifications OK No thanks