Perambalur: Milking machines given by MLA in subsidy!
பெரம்பலூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் கிராமத்தில், மாநில திட்டக் குழுவின் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆலத்தூர் மற்றும் வேப்பந்தட்டை வட்டாரங்களில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் 80 நபர்களுக்கு ரூ.28 லட்சம் மதிப்பீட்டிலான பால் கறவை இயந்திரங்களை பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் வழங்கினார். பின்னர், அவர் பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சரின் சீர்மிகு திட்டங்களால் அனைத்து வருவாய் கிராமங்களிலும் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை அமைத்து வெற்றிகரமாக பால் உற்பத்தியை செய்து தமிழகத்தின் முதன்மை மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டம் திகழ்ந்து வருகிறது. 4 வட்டங்களை மட்டுமே கொண்டுள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு தற்போது 2,35,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு 20,000 லிட்டர் உள்ளூர் விற்பனை போக 2,15,000 லிட்டர் ஒன்றியத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் உற்பத்தி பாலின் அளவானது தமிழகத்தின் முதல் மாவட்டமாக திகழ்கிறது. தூய பால் உற்பத்தியிலும் மாநிலத்தில் முதல் மூன்று இடங்களில் பெரம்பலூர் மாவட்டம் உள்ளது. பால் உற்பத்தியில் முன்னிலை மாவட்டமாக திகழ்ந்துவரும் பெரம்பலூர் மாவட்டத்திற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து பால் ஊற்றும் உறுப்பினர்களுக்கும் லிட்டருக்கு ரூ.3 அரசு ஊக்கத் தொகையாக ஒவ்வொரு மாதமும் பால் உற்பத்தியாளர்களின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்டு வருகிறது.
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு இது போன்று பல்வேறு அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆலத்தூர் வட்டாரத்திற்குட்பட்ட 30 நபர்களுக்கும், வேப்பந்தட்டை வட்டாரங்களில் உள்ள 50 தொடக்க பால் உற்பத்தியாளர்களுக்கு 80 சதவீத மானியத்தில் தலா ரூ.35,000 மதிப்பிலான பால் கறவை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் அதிக பால் ஊற்றும் உற்பத்தியாளர்களுக்கு இன்று பால் கறவை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பாலினை தூய்மையாக கரைந்திட முடியும் பால் கறப்பதற்கான நேரமும், சேமிப்பாகும். எனவே பால் உற்பத்தியாளர்கள் இந்த பால் கறவை இயந்திரத்தை பயன்படுத்தி அரசுக்கு தூய்மையான பால் வழங்கி பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என பேசினார்.
பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன், வேப்பந்தட்டை திமுக ஒன்றிய செயலாளர்கள் ஜெகதீஸ்வரன், நல்லத்தம்பி, கூட்டுறவு சங்க செயலாளர்கள் பணியாளர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.