Perambalur: Minister S.S. Sivashankar honored the officers and sanitation workers who worked with you to make the Stalin Project Camp a success!
பெரம்பலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட வாலிகண்டபுரம், தேவையூர் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு வாலிகண்டபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியிலும், குன்னம் வட்டத்திற்குட்பட்ட ஆடுதுறை, திருமாந்துறை ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு திருமாந்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் நடைபெற்றது.
தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்இந்த முகாம்களைப் பார்வையிட்டு, பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டவைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலை வகித்தார். அமைச்சர் சிவசங்கர், பொதுமக்களின் மனுக்களை முறையாக பதிவு செய்வதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், அரசு நிர்வாகத்தைத் தேடி பொதுமக்கள் சென்ற காலத்தை மாற்றி மக்களைத் தேடி அரசு நிர்வாகம் சென்று கோரிக்கை மனுக்களைப் பெறும் இத்திட்டம் குறித்து பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.
உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் வழங்கப்படும் அனைத்து மனுக்கள் மீதும் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், மனுவின் மீது எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து மனுதாரருக்கு விளக்கிட வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்களையும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களையும், ஒருவருக்கு இருப்பிடச் சான்றிதழையும் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் வழங்கினார்.
மேலும், இந்த முகாம்கள் சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு நல்கிய தூய்மை பணியாளர்கள், காவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் என அனைவருக்கும் அமைச்சர் சிவசங்கர் பொன்னாடை போர்த்தி கவுரவித்து நன்றி தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், வேப்பந்தட்டை தாசில்தார் துரைராஜ், வேப்பந்தட்டை பிடிஓ பூங்கொடி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கலியம்மாள் அய்யாக்கண்ணு உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.