Perambalur: Minister Sivashankar inaugurated the second phase of the nearly 40-year-old demand by issuing land titles to 301 people and carrying out works worth Rs. 8.87 crore.
பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குட்பட்ட ஜமாலியா நகர் பகுதியில் வசித்து வரும் மக்களின் சுமார் 50 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 301 நபர்களுக்கு இரண்டாம் கட்டமாக இலவச வீட்டுமனைப் பட்டாக்களை தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கலெக்டர் ச.அருண்ராஜ் தலைமையில் வழங்கினார். பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
அமைச்சர் சிவசங்கர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, ஒரு மகத்தான நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஏறக்குறைய 50 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், லப்பைக்குடிக்காடு பேரூராட்சியைச் சேர்ந்தவர்கள் லப்பைக்குடிகாடு வீட்டுவசதி சங்கம் ஒன்றை ஏற்படுத்தி பதிவு செய்து, பெண்ணகோணம் (வடக்கு) கிராமத்தில் லப்பைக்குடிகாடு வீட்டு வசதி சங்கத்தின் மூலம் கிரையம் மனைகளாகப் பிரித்து, ஜமாலியா நகர் என்று பெயரிடப்பட்ட பகுதியில் வீடு கட்டி வசித்து வருவதால், அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என சுமார் 40 ஆண்டு காலமாக கோரிக்கை வைக்கப்படுவதாகவும், இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் இப்பகுதி ஜமாத் தலைவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து, அதற்கான பணிகளை மேற்கொண்டு முதற்கட்டமாக 100 நபர்களுக்கு 08.02.2025 அன்று வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவரின் தொடர் நடவடிக்கையால், மாவட்ட வருவாய் அலுவலரின் முயற்சியால் வருவாய்த்துறையினர், நில அளவைத் துறையினர் முழுவீச்சில் நடவடிக்கை எடுத்தையடுத்து, இரண்டாம் கட்டமாக 301 நபர்களுக்கு இன்று வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது, ஒரு அரசு எப்படி துரிதமாக செயல்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றார்களோ அதற்கு உதாரணமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அரசு திகழ்கின்றது, மக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நீங்கள் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும், என தெரிவித்தார்.
பின்னர், லப்பைக்குடிக்காடு பேரூராட்சியின் சார்பில் ஜமாலியா நகர் பகுதிக்கு, தமிழ்நாடு நகர்ப்புற சாலை கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.67 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினையும், தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.7.20 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியினையும் துவக்கி வைத்தார். மேலும், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக வாங்கப்பட்ட டிராக்டர் வாகனத்தை லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி அலுவலக பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், ஒன்றிய செயலாளர்கள் அழகு.நீலமேகம், தி.மதியழகன், மருவத்தூர் ராஜேந்திரன், முன்னாள் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, குன்னம் தாசில்தார் சின்னதுரை, லப்பைக்குடிக்காடு பேரூராட்சி தலைவர் ஏ.எஸ்.ஜாஹிர் உசேன், துணைத்தலைவர் திரு.ரசூல் அஹமது, ஜமாலியா நகர் கமிட்டி தலைவர் அகமது உசேன், பள்ளிவாசல் தலைவர்கள் சுல்தான் முஹைதீன் (மேற்கு பள்ளிவாசல்), சம்சுதீன் (கிழக்கு பள்ளிவாசல்), ஜமாலியா நகர் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.