Perambalur: Minister Sivasankar presented government welfare schemes worth Rs. 1.93 crore at a public relations camp!
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட, கொட்டரை கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கலெக்டர் ச.அருண்ராஜ், தலைமையில் 175 பயனாளிகளுக்கு ரூ.1.93 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கொட்டரை பகுதி பொதுமக்கள், கொட்டரை நீர்த்தேக்கத்திற்கு அருகாமையில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாதை வேண்டி வைக்கப்பட்டிருந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், அந்தப் பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மிக விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும் இந்தப் பகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் மிக விரைவில் நிறைவேற்றப்படும். குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்ததன் காரணமாகவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எனக்கு போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத் துறையினை ஒதுக்கி, சட்டமன்ற உறுப்பினராக என்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு உண்டான வாய்ப்பினை வழங்கியுள்ளார். எனவே, பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அனைத்து முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன், என அமைச்சர் சிவசங்கர் பேசினார்.
இம்முகாமில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் நத்தம் பட்டா, இயற்கை மரண உதவித்தொகை, திருமண உதவித்தொகை, விபத்து நிவாரண நிதி, புதிய குடும்ப அட்டைகள், கலைஞரின் கனவு இல்லம் மற்றும் பிரதம மந்திரி குடியிருப்ப்பு திட்டத்தில் வீடுகளும், பயிர் கடன், சுய உதவிக்குழுக்களுக்கு கடன், திருமண நலத்திட்டம், நீர்தெளிப்பான், சலவைப்பெட்டிகள், ஊட்டச்சத்து பரிசு பெட்டகம், காதொலி கருவி மற்றும் ஊன்றுகோல், தாது உப்பு கலவை கருவிகள் என மொத்தம் 175 பயனாளிகளுக்கு ரூ.1,92,78,137 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், ஆலத்தூர் திமுக ஒன்றிய செயலாளர் ந.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.