Perambalur: Nalam Kakkum Stalin Thittam; Preparation work coordination committee meeting headed by the Collector!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நடந்தது. அப்போது அவர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் உடல் நலனில் அக்கறை கொண்டு “நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு முகாம்கள் நடத்த அறிவுறுத்தியுள்ளார். கிராமப் புற மக்களுக்கு உயர்தரமான மருத்துவ சேவைகள் அவர்களது கிராமத்திலேயே கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் இந்த முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் முதல் முகாம் 26.07.2025 அன்று துங்கபுரம் கிராமத்தில் முதல் கட்டமாக நடத்தப்பட உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 3 முகாம்கள் வீதம் மொத்தம் 12 முகாம்கள் நடத்தப்படவுள்ளது.
இதற்காக பொது மருத்துவர் , குழந்தைகள் மருத்துவர், அறுவை சிகிச்சை மருத்துவர், தோல் மருத்துவர், சர்க்கரை நோய் மருத்துவர், இருதய நோய் மருத்துவர், நரம்பியல் மருத்துவர், சிறப்பு பல் மருத்துவர், மகப்பேறு மருத்துவர், எலும்பு மூட்டு மருத்துவர், கண் மருத்துவர், நுரையீரல் மருத்துவர், கதிர்வீச்சு மருத்துவர், இயன்முறை சிகிச்சை மருத்துவர், காது மூக்கு தொண்டை மருத்துவர், மனநல மருத்துவர், மற்றும் ஆயுஷ் மருத்துவர்கள் ஆகிய 17 சிறப்பு மருத்துவர்கள், மருத்துவர்கள் 13 நபர்கள், செவிலியர்கள் 20 நபர்கள் உட்பட பல மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த மருத்துவ பணியாளர்கள் அனைவரும் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டம் பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்த ஒத்துழைக்க வேண்டும்.
மேலும், இந்த முகாமில் இருதய நோய், எலும்பு மூட்டு மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், பொது மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், கர்ப்பிணி பெண்களுக்கான ஸ்கேன் பரிசோதனை மற்றும் பல்வேறு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது. எனவே பொதுமக்களுக்கு இந்த திட்டம் குறித்த பயனை எடுத்துரைத்து இந்த முகாமினை பொதுமக்களுக்கு பயனுள்ளதாக மாற்ற அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மேலும் இம்முகாம் கிராமப்புற பகுதியில் நடைபெற உள்ளதால் கிராமத்தில் உள்ள முதியோர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், தூய்மை காவலர்கள் உள்ளிட்ட அனைவரையும் கலந்து கொள்வதற்கான பணிகளை தொடர்புடைய ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் வருவாய்த் துறையினர் மேற்கொள்ள வேண்டும். முகாம் நடைபெறும் இடங்களில் இதுவரை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பெறாத நபர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டையும் உடனடியாக வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். முகாம் நடைபெறும் இடங்களில் போதுமான அடிப்படை வசதிகள், வாகன போக்குவரத்து வசதிகளை தொடர்புடைய அலுவலர்கள் ஏற்படுத்திக் கொடுத்திட வேண்டும் சிறப்புமிக்க இந்த திட்டத்தை சிறப்பாக நடத்திட அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மாரிமுத்து, மாவட்ட சுகாதார அலுவலர் கீதா, தேசிய சுகாதாரக் குழுமம் உதவி திட்ட அலுவலர் விவேகானந்தன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் செல்வம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், வட்டார மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.