Perambalur: Nammalvar Award for farmers cultivating organic farming methods; Collector’s information!

நம்மாழ்வார் Santhosh Tarun (Facebook)
உயிர்ம வேளாண்மை என்பது செயற்கை ரசாயன உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றை தவிர்த்து இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி, இயற்கை மற்றும் அங்கக எரு பயன்படுத்துதல் மூலம் பயிர் பாதுகாப்பு மற்றும் பயிர் சாகுபடி செய்யப்படுவதோடு மண் வளத்தையும் பாதுகாப்பது அங்கக விவசாய சாகுபடியாகும். அங்கக வேளாண்மையில் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் அங்கக கழிவுகளை நன்றாக மக்கச் செய்து, அதில் உள்ள ஊட்டச்சத்துகளை மண்ணிற்கு அளித்து பயிர்கள் கிரகித்துக் கொள்ள உதவுகின்றது. நுண்ணுயிர்கள் ஊட்டச்சத்துகளை மெதுவாகவும், சீராகவும் வெளியிடுகின்றன. இதனால் மாசற்ற சூழலில் பயிர்கள் வளர்வதனால் நஞ்சற்ற விளை பொருட்களை உற்பத்தி செய்ய முடியும்.
இயற்கை விவசாயம் செய்யும் தன்னார்வ விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்காக, 2025-26-ஆம் ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கி மற்ற விவசாயிகளையும் ஊக்குவிக்கும் உயிர்ம விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும் என மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது.
நம்மாழ்வார் விருது பெற விரும்பும் விவசாயிகள் அக்ரிஸ்நெட் https://www.tnagrisnet.tn.gov.in/ வலைதளத்தில் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான பதிவுக் கட்டணம் ரூ.100- செலுத்த வேண்டும். குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பில் உயிர்ம வேளாண்மையில் சாகுபடி செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 03 ஆண்டுகள் உயிர்ம வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும். மேலும் அதற்கான சான்றும் பெற்றிருக்க வேண்டும். முழுநேர உயிர்ம விவசாயியாக இருத்தல் வேண்டும். வெற்றி பெறும் 03 விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் விருதுடன் தலா ரூ.2 இலட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படும்.
விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள், அதற்கான வழிமுறைகள் குறித்து, அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு தெரிவித்து பயன்பெறுமாறு கலெக்டர் அருண்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.