Perambalur: Perarignar Anna’s birthday – Oraniyel Tamil Nadu in unison – Polling station-level pledge proposal meetings! District DMK in-charge V. Jagatheesan’s statement!
பெரம்பலூர், செப்டம்பர்.9- அன்று, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், காணொளிக் காட்சி வாயிலாக நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, செப்டம்பர் 15 – அன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள 68,000 வாக்குச்சாவடிகளிலும் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்த குடும்பங்கள் கூடி மண்-மொழி-மானம் காப்பதற்கான உறுதிமொழியை முன்மொழிய வேண்டும் என தலைவரின் உத்தரவுப்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் உறுதிமொழி கூட்டங்கள் குறித்து, மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விபரம் பின் வருமாறு:
திமுக துணைப் பொதுச்செயலாளர் – மேனாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா.எம்.பி., வழிகாட்டுதல்படியும், போக்குவரத்துத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலோசனைக்கினங்க,
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பள்ளி மைதானங்கள், சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபங்களில் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் இணைந்த குடும்பங்களை அழைத்து நிகழ்ச்சி நடத்திட வேண்டும். என் வாக்குச்சாவடி, வலிமையான வாக்குச்சாவடி என்பதை உணர்த்திடும் வகையில் அந்தந்த வாக்குசாவடிக்குட்பட்ட மாநில-மாவட்ட-ஒன்றிய-நகர- பகுதி-பேரூர் கழக நிர்வாகிகள்- சார்பு அணியினர் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.
BDA, BLC, ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் என குறைந்தபட்சம் 100 பேர்களாவது இக்கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும். மாவட்டச் செயலாளர்கள் பகுதி/நகர/ஒன்றிய/பேரூர் செயலாளர்கள் கூட்டத்தை செப்டம்பர் 12 – ஆம் தேதிக்குள் நடத்தி கூட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கிட வேண்டும். பகுதி/நகர/ஒன்றிய/பேரூர் கழகத்திற்குட்பட்ட வாக்குச்சாவடி முகவர்களை அழைத்து செப்டம்பர் 13 ஆம் தேதிக்குள் ஒன்றிய/நகர/பகுதி/பேரூர்க்கழகச் செயலாளர்கள் அழைத்து கூட்டம் நடத்துவதற்கான வழிமுறைகளை வழங்கிட வேண்டும்.
நிகழ்ச்சியின் நிழற்படங்கள் (Photos), காட்சிப்படங்களை (Videos ) BDA க்கள் வாட்ஸப் குழுக்களில் பதிவிட வேண்டும். அதேபோல செயலியில் பதிவேற்ற வேண்டும். தகவல் தொழில்நுட்ப அணி இப்பணியை ஒருங்கிணைக்க வேண்டும். ஒவ்வொரு கூட்டத்திலும் உறுதிமொழி முன்மொழியப்பட வேண்டும். உறுதி மொழி ஏற்பினை BDA -க்கள் புகைப்படம் & வீடியோ எடுத்து தலைமைக்கு அனுப்பி வைத்திட வேண்டும்.
▪️காலை 9 மணிக்கு பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளைக் கொண்டாடி உறுதிமொழியை முன்மொழிவது சிறப்பு, திங்கட்கிழமை என்பதால் மாலை வேளையில் நடத்தினால் சிறப்பாக இருக்கும் எனக் கருதும் வாக்கு சாவடிகளில் மாற்றி நடத்திக் கொள்ளலாம். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் செப்டம்பர் 15 அன்று உறுதிமொழி முன்மொழிவு நடைபெறுவதை மண்டல பொறுப்பாளர்களும் – மாவட்டச் செயலாளர்களும்- தொகுதிப்பார்வையாளர்களும் உறுதி செய்திட வேண்டும்.
உறுதிமொழி : தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன், ஓரணியில் தமிழ்நாடு குடும்பத்தில் இணைந்துள்ள 1 – கோடிக் குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து, “தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!” என உறுதி ஏற்கிறோம்! நான், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதாசாரத்தைக் குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் போராடுவேன், தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.
நான், வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் #SIR-க்கு எதிராக நிற்பேன், தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன். நான், நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன், நம் மாணவர்களுக்கு உரிய கல்வி நிதிக்காகப் போராடுவேன், ஒருபோதும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.
நான், தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பெருமைக்கு (நன்மதிப்பிற்கு) எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடுவேன். எதற்காகவும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.
நான், ‘பெண்கள் – விவசாயிகள் – மீனவர்கள் – நெசவாளர்கள் – தொழிலாளர்கள்’ என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்கத் தேவையான நிதிக்காகப் போராடுவேன். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன். மேற்கண்ட விபரப்படி ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள் உறுதிமொழி கூட்டங்கள் நடத்திட வேண்டும், இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள்,ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணியினர் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.