Perambalur: Subsidy for companies providing employment to persons with disabilities; Collector Information!

தமிழ்நாடு முதலமைச்சர் 2025-2026 ஆம் நிதியாண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கையில் புதிய அறிவிப்பான தனியார் துறைகள் நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்தும் தனியார் துறைகள் மற்றும் நிறுவனங்களுக்கு ஊதிய மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
அதனடிப்படையில், மாற்றுத்திறனாளிகளுக்கு பணிவாய்ப்பு வழங்கிய தகுதியான தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஊதிய மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்காக விண்ணப்பிக்கும் தனியார் நிறுவனங்கள் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் / நிறுவனங்களின் பதிவாளர் (Registrat of Companies – ROC) / தொழிலாளர் துறை / தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை . மேலும் இதர அரசுத்துறைகளில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களாக இருத்தல் வேண்டும். அந்நிறுவனங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு கொண்டு இருத்தல் வேண்டும். தனியார் நிறுவனம் / தொழிற்சாலை / அமைப்புகளில் 10 மாற்றுத்திறனாளிகளை குறைந்தபட்சம் 6 மாதங்கள் தொடர்ந்து பணியமர்த்தி இருக்க வேண்டும். அத்தகைய நிறுவனங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்ட நாள் முதல் மாதம் ஒரு நபருக்கு ரூபாய் இரண்டாயிரம் வீதம் ஒரு ஆண்டுக்கு ரூ.24,000/- ஊதிய மானியம் அரசால் வழங்கப்படும். குறைந்தபட்சம் 10 மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்திய தகுதியுள்ள தனியார் நிறுவனம் / தொழிற்சாலை / அமைப்புகள் மாற்றுத்திறனாளிகள் வருகை பதிவேடு உள்ளிட்ட விவரங்களை அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் ஊதிய மானியம் பெறுவதற்கு தகுதியான நிறுவனங்களை தேர்ந்தெடுப்பதற்கு ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் கீழ்க்கண்ட உறுப்பினர்களைக் கொண்ட ஆய்வுக்குழு (Scrutiny Committee) அமைக்கப்படும். இக்குழு பெறப்படும் விண்ணப்பங்களை சரிபார்த்து, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்திற்கு பரிந்துரை செய்து அனுப்பப்படும். தனியார் நிறுவனம் / தொழிற்சாலை / அமைப்புகள் நடப்பு ஆண்டு வரை அரசுக்கு தாக்கல் செய்ய வேண்டிய ஆவணங்கள் GST பதிவு, வர்த்தக உரிமம் (Trade License) அல்லது EPF பதிவு போன்ற சட்டப்éர்வமான பதிவு சான்றுகள் நிலுவையில் இல்லாமல் சமர்ப்பித்திருக்க வேண்டும்.
அரசாணை (நிலை) எண்.52, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (D2) துறை, நாள். 09.10.2024-ல் தெரிவித்துள்ள திட்டத்தின் கீழ் பயன் பெறாத தனியார் நிறுவனங்களாக இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை / தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) பெற்றிருக்கும் மாற்றுத்திறனாளிகள் தகுதியுடையவரா அவர்கள். மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் , 2016 (Rights of Persons with Disabilities Act, 2016) – பிரிவு 2(r)- ன் படி 40% மற்றும் அதற்கு மேல் மாற்றுத்திறன் (Disability Percentage) கொண்டவராக இருத்தல் வேண்டும்.
தகுதியுள்ள தனியார் நிறுவனம் / தொழிற்சாலை / அமைப்புகள் அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அல்லது மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் (முழுமையான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்). மேலும், நிறுவன பதிவு சான்று (GST / Trade License / EPF), ஒவ்வொரு மாற்றுத்திறனாளியின் UDID அட்டை/ மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, PF/ESI சான்றுகள் (குறைந்தபட்சம் 6 மாதங்கள்), பணியாளர் பட்டியல் மற்றும் சம்பள விவரங்கள் ஆகிய ஆவணங்கள் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
தகுதியுள்ள நிறுவனங்கள், https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf4qMsKrg9nq1xQID8ekQTJ6P_VNb7JkIhA4hPf_xK-l39Jw/viewform இணைய தளம் வாயிலாக வரும் 23.01.2026-க்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497