Perambalur: Tamil Nadu Day; Essay – Speech Competitions for students of classes 6-12 in all schools; Collector’s Information!
தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜுலை 18ஆம் நாளினையே தமிழ்நாடு நாளாக இனி கொண்டாடப்படும் எனத் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. “தனித்துவ தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட 18.07.1967ஆம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டு தோறும் சூலை 18ஆம் நாள் தமிழ்நாடு நாள் என்ற பெயரில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு நாளை நினைவு கூறும் வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் 04.07.2025 அன்று பெரம்பலூர் மாவட்டம் பாரத சாரண, சாரணியப் பயிற்சி மையத்தில் (தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி அருகில்) நடத்தப்பெறும்.
ஆட்சிமொழி வரலாற்றில் கீ. இராமலிங்கம், பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையாரின் தமிழ் ஆட்சிச் சொல் பணி ஆகிய 02 தலைப்புகளில் கட்டுரை போட்டியும், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, அன்னைத் தமிழே ஆட்சிமொழி, தொன்றுதொட்டு தமிழ்நாடு எனும் பெயர், அறிஞர் அண்ணா கண்ட தமிழ்நாடு, ஆட்சிமொழி விளக்கம், தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய நிகழ்வு, ஆட்சிமொழி – சங்க காலம் தொட்டு, இக்காலத்தில் ஆட்சிமொழி ஆகிய 08 தலைப்புகளில் பேச்சுப் போட்டியும் நடைபெறவுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கானக் கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.10,000மும், இரண்டாம் பரிசாக ரூ.7,000மும், மூன்றாம் பரிசாக ரூ.5,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப் பெறும்.
முதன்மை கல்வி அலுவலரால் அளிக்கப்பெறும் பெயர்ப்பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே போட்டிகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள். போட்டி பற்றிய கூடுதல் விவரங்களுக்கு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பெரம்பலூர், செல்பேசி எண். 70943 19475 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவிகள் இப்பேச்சுப் போட்டியில் பங்கேற்று பயன்பெறுமாறு கலெக்டர் அருண்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.