Perambalur: “Tamil Nadu in unity”; DMK members meet the public for 45 days! District in-charge V. Jagatheesan appeals to unite against BJP!
பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் “ஓரணியில் தமிழ்நாடு” பரப்புரை குறித்து மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் தெரிவித்தாவது:
திமுகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த “ஓரணியில் தமிழ்நாடு” என்ற பரப்புரையின் முழக்கத்தை தொடங்கி வைத்துள்ளார். இன்று தொடங்கி அடுத்த 45 – நாட்களுக்கும் ஒவ்வொரு கிராமம், நகரம், பூத் என தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் “ஓரணியில் தமிழ்நாடு” என்கிற முழக்கத்தை ஒலிக்கச் செய்ய உள்ளது.
தி.மு.க. “ஓரணியில் தமிழ்நாடு” பரப்புரை என்பது தி.மு.க.விற்கு உறுப்பினர் சேர்க்கும் ஒரு நிகழ்வாக மட்டுமே இருக்கக்கூடாது. தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காப்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் ஒன்று திரட்டுவது தான் இதன் முக்கிய நோக்கம் என முதலமைச்சர் ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளார்.
சாதி, மத, அரசியல் பாகுபாடுகள் இன்றி தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரையும் அணுகி, தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் அனைத்து அநீதிகளுக்கும் எதிராக ஓரணியில் திரள வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்க உள்ளோம். பா.ஜ.க. என்கிற பாசிச சக்தி தமிழ்நாட்டை எப்போதும் வன்மத்தோடு பார்க்கிறது. ஒன்றியத்தில் ஆட்சியை பிடித்த பிறகு ஏற்பட்ட பாதிப்பை காட்டிலும் தமிழ்நாடு அரசு பா.ஜ.க.வின் கோரப்பிடியில் சிக்கினால் ஏற்படும் ஆபத்து மிகவும் கொடூரமானதாக இருக்கும் அதற்கு அ.தி.மு.க. கூட்டணி என்ற பெயரில் அடித்தளம் அமைத்துக் கொடுத்து வருகிறது.
ஏற்கனவே, பா.ஜ.க. ஆட்சி அமைந்துள்ள மாநிலங்கள் பாசிசத்தின் பரிசோதனை கூடங்களாக மாறி நிற்கின்றன. உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்கள் கூட தங்கள் தாய் மொழியை இழந்து இந்தி என்கிற ஒரு மொழியையே மட்டும் கற்கும் அவலத்தில் சிக்கியுள்ளன. கடும் எதிர்ப்பால் நாடு தழுவி அளவில் சிவில் சட்டத்தை அமல்படுத்த முடியாத பா.ஜ.க. தங்கள் கட்சி ஆளும் உத்தரகாண்டில் அறிமுகப்படுத்தி பரிசோதனை செய்து பார்த்தது. தமிழ்நாட்டையும் பாசிசம் என்கிற கொடூர விஷத்தை பரிசோதித்து பார்க்கும் பரிசோதனை கூடமாக மாற்ற ஒன்றிய பாஜக அரசு நினைக்கும் இந்த நேரத்தில் தமிழ்நாடு மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு அதனை எதிர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பெருமைகளை கூட அங்கீகரிக்க மனமில்லாத அளவிற்கு தமிழ்நாட்டின் மீது வன்மம் கொண்டுள்ள கட்சி பா.ஜ.க. துரோகிகளையும், போலிகளையும் வைத்துக்கொண்டு தமிழ்நாட்டை வீழ்த்த பா.ஜ.க. நடத்தும் சதி ஒருபோதும் எடுபடாது என்பதை ஓரணியில் நின்று தமிழ்நாட்டு மக்கள் சுட்டிக்காட்டுவதற்கு முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் ஏற்படுத்திக் கொடுத்துள்ள களம்தான் “ஓரணியில் தமிழ்நாடு” என்ற இந்த மக்கள் இயக்கம். இந்த பரப்புரையின் போது விருப்பம் உள்ள குடும்பத்தினரை தி.மு.க.வில் உறுப்பினர் ஆக்குவதும் என்பது இரண்டாவது பட்சம்தான். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பத்தினரையும் ஒரணையில் தமிழ்நாடு என்கிற ஒரே குடையின் கீழ் ஒன்றிணைப்பது தான் எங்கள் முக்கிய இலக்கு.
சமீபகாலமாக தமிழ்நாடு பண்பாடு, கலாச்சாரம், அரசியல் ரீதியிலான அநீதிகளை சந்தித்து வருகிறது. கீழடி தொன்மையை அங்கீகரிக்க மறுப்பது. இந்தி திணிப்பு , கல்விக்கான நிதியை நிறுத்தி வைப்பது, கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள மாநில உரிமைகளை அபகரிப்பது. நீட் தேர்வு மூலம் இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என பல்வேறு அநீதிகள் ஒன்றிய பா.ஜ.க. அரசால் தமிழ்நாட்டிற்கு இழக்கப்படுகிறது.
மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறு சீரமைப்பு மூலம் தமிழ்நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு ஆபத்து ஏற்படுத்தி நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் குரல் வளையை நசுக்கவும் முயற்சி நடக்கிறது. ஒவ்வொரு முறை தமிழ்நாட்டை இருள் சூழும் போதும், தமிழ்நாட்டு மக்கள் ஒன்றிணைந்து அந்த இருளை அகற்றி ஒளியை மீட்டு எடுத்துள்ளார்கள். அச்சுறுத்தல் வரும்போது ஒன்று கூடி அதனை எதிர்கொள்வோம். ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விடப்படும்போது அதற்கு எதிராக கிளர்ந்தெழுவோம் என்பதுதான் தமிழ்நாடு கடைபிடிக்கும் எழுதப்படாத விதி.
மீண்டும் ஒரு முறை மண்,மொழி, மானம் காப்பதற்கு ஒன்று கூடுவதற்கு தமிழ்நாடு தயாராகிவிட்டது. நம்முடைய முன்னோர்களின் போராட்டமும், தியாகமும், நமக்கான வாழ்வாதாரத்திற்கானது மட்டுமல்ல. சுயமரியாதையோடும், கண்ணியத்தோடும் நாம் வாழ வேண்டும் என்பதற்காகத்தான். அதன் தொடர்ச்சியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தற்போது இளைஞர்கள் கையில் உள்ளது. தமிழ்நாட்டின் கண்ணியத்தையும் சுயமரியாதையையும் உரிமைகளையும் காக்க மீண்டும் ஒருமுறை ஒன்று கூடி போராட வேண்டிய தருணம் இது. இந்த போராட்டம் நமக்கானது மட்டுமல்ல நம்முடைய குழந்தைகளுக்கானது, எதிர்கால தலைமுறைக்கானது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் “ஓரணியில் தமிழ்நாடு” என்கிற முழக்கத்தை மேற்கொண்டு இந்த செய்தியை தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தினரிடையேயும் கொண்டு செல்ல உள்ளோம்.
முதலமைச்சர் மேற்கொண்டுள்ள முன்னெடுப்பிற்கு வலு சேர்க்கும் விதமாக ஜூலை 02 – முதல் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசியல் கட்சியின் நிர்வாகிகள் சார்பு அணியினர் உள்ளிட்டோருடன் இணைந்த பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. ஜூலை 3 – ஆம் தேதி முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வீடு, வீடாக சென்று பரப்புரை மேற்கொள்ளப்படும்.
கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும் வாக்குச்சாவடியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக சென்று “ஓரணியில் தமிழ்நாடு” இணைய வேண்டியதன்அவசியத்தை எடுத்துரைக்க உள்ளோம். இந்த முன்னெடுப்பின் முக்கிய அம்சமாக கட்சியின் பூத் டிஜிட்டல் ஏஜெண்டுகள்(BDA) செயல்படுவார்கள். இந்த பரப்புரை முழக்கத்தை உடனுக்குடன் கண்காணித்து பதிவு செய்யும் பிரத்தியேக செயலியை கையாளும் திறன் கொண்ட திறன்மிகு இளைஞர் படையினர் கட்சியின் பூத் டிஜிட்டல் ஏஜெண்டுகளாக களம் இறக்கப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடி முகவர்களுடன் (BLA 2) இணைந்து பூத் டிஜிட்டல் ஏஜெண்டுகள் இந்த பரப்புரையை முன்னெடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிப்பார்கள்.
இவர்கள் வெறும் செயலிகளைப் பயன்படுத்துவதற்காக பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல இந்த “ஓரணியில் தமிழ்நாடு” முழக்கத்தின் முக்கிய செய்தி என்ன? இலக்கு என்ன? என்பதை ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் கனிவோடு எடுத்துரைக்கும் திறன் கொண்டவர்கள். “ஓரணியில் தமிழ்நாடு” முழக்கத்தோடு ஒத்துப் போகும் குடும்பத்தினர் தங்களின் ஆதரவை பதிவு செய்யலாம். கூடுதலாக தி.மு.க.விலும் இணைய விருப்பமுள்ளவர்கள் செயலி மூலம் பதிவு செய்தும் நேரடியாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்தும் தி.மு.க.வில் உறுப்பினராக இணைத்துக்கொள்ளப்படுவார்கள்.
வீடு, வீடாக மேற்கொள்ளும் இந்த பரப்புரை வரும் ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் நிறைவடையும். அப்போது இந்த முன்னெடுப்பின் பயனாக தமிழ்நாட்டின் மண், மொழி மானம் காப்பதற்கு மக்களிடையே வரலாறு காணாத அளவில் ஒற்றுமை ஏற்படும் அதனைக் கொண்டாடும் விதமாக கொண்டாட்ட கூட்டங்கள் நடத்த வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த பரப்புரை முன்னெடுப்பின் நகர்வுகள் செயலி மூலம் உடனுக்குடன் கண்காணிக்கப்படும். “ஓரணிவில் தமிழ்நாடு” பரப்புரை இயக்கத்தின் சமரசமே இல்லாது இரண்டு விஷயங்களை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இந்த முன்னெடுப்பு திமுகவிற்கான உறுப்பினர் சேர்க்கையாக மட்டுமே இருக்காது. தமிழ்நாட்டை பாதுகாக்கஓரணயில் தமிழ்நாட்டு மக்களை ஒன்று திரட்டுவதுதான் முக்கிய இலக்கு.
இந்த பரப்புரை இயக்கத்தின் மூலம் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த குடும்பத்தினர் உள்பட தமிழ்நாட்டில் உள்ள 100% குடும்பத்தினரையும் சென்றடைந்து தமிழ்நாடு ஓரணியில் திரள வேண்டியதின் அவசியத்தை எடுத்துரைப்போம். என தெரிவித்தார். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் உடனிருந்தார்.