Perambalur: Temporary post graduate/graduate teachers; Collector information!
பெரம்பலூர் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கும் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் கீழ் 4 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 8 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளது.
ஆலத்தூர் வட்டம், நத்தக்காடு அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நிலையில் வணிகவியல், பொருளியியல் வரலாறு, கணிதவியல் ஆகிய 4 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கும்,
பட்டதாரி ஆசிரியர் நிலையில் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலை,மேல் நிலைப்பள்ளிகளாவன, களரம்பட்டி, பசும்பலூர் ஒகலூர் பள்ளிகளில் அறிவியல், அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, நத்தக்காடு கணிதம், அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி, பாடாலூர் மற்றும் பசும்பலூரில் சமூக அறிவியல், அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி, இலாடபுரம் மற்றும் ஒகளுரில் ஆங்கிலம் ஆகிய 8 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கும், பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தொகுப்பூதியத்தில் முற்றிலும் தற்காலிகமாக நியமனம் செய்திட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
பணியில் சேர விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் தங்களது எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ / அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித்தகுதி சான்று நகல்களுடன் இணைத்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், பெரம்பலூர் -621212 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம். மேற்கண்ட முதுகலை பட்டதாரி/ பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு முதுகலை பட்டப்படிப்பில் மற்றும் இளநிலை பட்டப்படிப்பில் ஆசிரியர் தகுதித்தேர்வு பி.எட், முடித்திருத்தல் வேண்டும். தற்காலிக முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.18,000/- மற்றும் பட்டதாரி ஆசியர்களுக்கு மாதம் ரூ. 15,000/- வீதம் ஊதியம் வழங்கப்படும். தற்காலிக முதுகலை பட்டதாரி / பட்டதாரி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 26.06.2025 பிற்பகல் 05.00 மணிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் கிடைக்குமாறு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேற்கண்ட தற்காலிக முதுகலைப்பட்டதாரி / பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட தகுதிவாய்ந்த பணிநாடுநர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நிலையில் இருப்பின் ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிலையில் இருப்பின் ஆசிரியர் தகுதித்தேர்வு ( II) தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள், அவ்வாறு இல்லையெனில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தகுதியான தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பள்ளி மேலாண்மைக்குழு மூலம் முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படுவார்கள். அவ்வாறு பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நிரப்பப்படும் ஆசிரியர்கள் பணிபுரியும் பணியிடத்திற்கு மேற்கண்ட காலத்திற்குள் (மாதத்திற்குள்) பதவி உயர்வு மூலமாகவோ அல்லது நேரடி நியமனம் மூலமாகவோ அல்லது மாறுதல் மூலமாகவோ நிரப்பப்படின் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நிரப்பப்படும் ஆசிரியர்களை உடனடியாக பணிவிடுவிப்பு செய்யப்பட வேண்டும்.
இந்நியமனமானது முற்றிலும் தற்காலிகமானது எனவும், மாறுதல் / முறையான நியமனங்களின் மூலம் காலிப்பணியிடம் பூர்த்தி செய்யப்படும் அன்றே தற்காலிக ஏற்பாட்டின் பேரில் பணியமர்த்தப்பட்டவர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார். மேலும், அன்னாரது பணி மற்றும் நடத்தை திருப்தி இல்லையெனில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி உடனடியாக பணியிலிருந்து விடுவிக்கப்படுவர். காலிப்பணியிடங்களுக்கு தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு இப்பணியில் நியமனம் செய்யப்படும் நாள் முதல் மார்ச்-2026 வரையும், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பணியில் நியமனம் செய்யப்படும் நாள் முதல் ஏப்ரல்-2026 முடிய உள்ள மாதங்களுக்கு மட்டும் ஊதியம் வழங்கப்படும்.
மேலும், கூடுதல் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் கீழ்தளத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தினை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கிரேஸ் லால்ரின்டிகி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.