Perambalur: “Ungalai Thedi Ungal Ooril” Program in Veppanthattai Taluck Villages; Collector’s information!
தமிழக முதலமைச்சரால், அறிவிக்கப்பட்ட “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் வட்ட அளவில் பிரதி மாதம் 3வது புதன் கிழமை கலெக்டர் உள்ளிட்ட அனைத்து மாவட்ட முதல் நிலை அலுவலர்கள் கிராமங்களில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்தும், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏப்ரல்-2025 மாதம் மூன்றாவது புதன்கிழமை (16.04.2025) அன்று “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்படி பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் முகாம் நடைபெறுகிறது.
அன்றைய தினம் பெரம்பலூர் கலெக்டர் மற்றும் அனைத்து மாவட்ட முதல் நிலை அலுவலர்கள் கிராமங்களில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்தும், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்கள் பெற உள்ளனர். மேலும், அன்றைய தினம் வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட வெங்கலம் குறுவட்ட பகுதிக்கு வெங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்திலும், பசும்பலூர் குறுவட்ட பகுதிக்கு பசும்பலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும் மற்றும் வாலிகண்டபுரம் குறுவட்ட பகுதிக்கு வாலிகண்டபுரம் கிராம நிர்வாக அலுவலகத்திலும் சிறப்பு பட்டா மாறுதல் முகாமும் நடைபெறவுள்ளது.
”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தில் கிராம பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ள வரும் மாவட்ட நிலை அலுவலரிடம் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை மற்றும் தங்கள் கிராமத்திற்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளையும் மனுக்களாக அளித்தும் மற்றும் பட்டா மாறுதல் சிறப்பு முகாமினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு, தெரிவித்துள்ளார்.