Perambalur: Works worth Rs. 13.92 crore underway in town panchayats under the Kalaignar Urban Development Scheme, informs the Collector!

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி ஆகிய பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.10.39 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் ந.மிருணாளினி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் சார்பில் குடிநீர் அபிவிருத்தித் திட்டத்தின் (2025 -26) கீழ் ரூ.4.91 கோடி மதிப்பில் 6 மீட்டர் சுற்றளவு, 24 மீட்டர் ஆழம் கொண்ட 2 புதிய கிணறு மற்றும் 1 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, 1.50 லட்சம் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த் தேக்கத் தொட்டி மற்றும் மேட்டாங்காடிலிருந்து குரும்பலூர் வரை சுமார் 8 கி.மீ நீளத்தில் பைப்லைன் அமைக்கும் பணி ஆகிய பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டார். இதனால், குரும்பலூர், பாளையம், கே.புதூர், மேட்டாங்காடு, ஈச்சம்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 13,500 பொதுமக்கள் பயன் பெறுவார்கள். பின்னர், குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் (2024-25), ரூ.3.85 கோடி மதிப்பில் 1 எம்.எல்.டி கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டார். இதனால் குரும்பலூர் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
தொடர்ந்து, வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் பேரூராட்சியில் மாநில மூலதன மானியத் திட்டத்தின் (2025-26) கீழ், ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் அரும்பாவூர் பேரூராட்சி செயல் அலுவலர் கட்டடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, பூலாம்பாடி பேரூராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு மூலதன மானியத் திட்டத்தின் கீழ் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வரும் பணிகளையும் பார்வையிட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2021 – 2022ஆம் ஆண்டிற்கு ரூ.546.09 லட்சம் மதிப்பீட்டில் 17 பணிகளும், 2022 – 2023ஆம் ஆண்டிற்கு ரூ.85.99 லட்சம் மதிப்பீட்டில் 2 பணிகளும், 2023 – 2024ஆம் ஆண்டிற்கு ரூ.16.76 லட்சம் மதிப்பீட்டில் 11 பணிகளும், 2024 – 2025ஆம் ஆண்டிற்கு ரூ.252 லட்சம் மதிப்பீட்டில் 5 பணிகளும், 2025 – 2026ஆம் ஆண்டிற்கு ரூ.491 லட்சம் மதிப்பீட்டில் 1 பணிகளும் என மொத்தம் ரூ.13.92 கோடி மதிப்பீட்டில் 36 பணிகள் கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது, என தெரிவித்தார். குரும்பலூர் பேரூராட்சி தலைவர் சங்கீதா ரமேஷ், செயல் அலுவலர்கள்: குரும்பலூர் தியாகராஜன், பூலாம்பாடி ருக்மணி, அரும்பாவூர் சபிதா மற்றும் பேரூராட்சிகளின் இளநிலை பொறியாளர் ரத்னகுமார் உள்பட பலர் உடனிருந்தனர்.









kaalaimalar2@gmail.com |
9003770497