Perambalur: World Population Day; Awareness rally; Inaugurated by the Collector!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மாவட்ட குடும்ப நலச் செயலகத்தின் சார்பில், விழிப்புணர்வு அலங்கார ஊர்தி மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான செவிலியர் பயிற்சி மாணவியர்களின் பேரணியை கலெக்டர் ச.அருண்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஜூலை 11, 1987 அன்று உலக மக்கள் தொகை 500 கோடி எட்டியதை முன்னிட்டு, மக்கள் தொகை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த ஐ.நா. சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 அன்று உலக மக்கள் தொகை தினமாக அனுசரிக்கப்படுகின்றது. அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் தலைமையில் மாவட்ட குடும்ப நல செயலக பணியாளர்கள் மற்றும் செவிலியர் பயிற்சி மாணவியர்கள் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பின்னர், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட செவிலியர் பயிற்சி மாணவியர்கள் பங்கேற்ற உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் முடிவுற்றது.

இப்பேரணியில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவியர்கள் நிரந்தர மற்றும் தற்காலிக குடும்ப நல முறைகள் குறித்தும், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வழிகள் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

“ உடலும் மனமும் பக்குவமடைந்து உறுதியாகும் வயது 21. அதுவே பெண்ணிற்கு திருமணத்திறகும், தாய்மையடைவதற்கும் உகந்த வயது” என்பது இந்த ஆண்டின் மக்கள் தொகை தினத்தின் முழக்கமாகவும், “ஆரோக்கியமான போதிய இடைவெளியுடன் பிள்ளைப்பேறு, திட்டமிட்ட பெற்றோருக்கான அடையாளம்” என்பது இந்த ஆண்டின் உலக மக்கள் தொகை தினத்தின் கருப்பொருளாகவும் உள்ளது.
ஒவ்வொரு பெண்ணின் திருமண வயது 21க்கு மேல் இருப்பதையும், இரு குழந்தைகளுக்கு இடையே உள்ள பிறப்பு இடைவெளி மூன்று ஆண்டுகள் என்பதையும் உறுதி செய்திட வேண்டும் என பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டது.

தாய் சேய் நலனை கருத்தில் கொண்டு பதின்ம வயது கர்ப்பங்கள் மற்றும் திருமணம் ஆகாத கர்ப்பங்களும் தவிர்க்கப்பட வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது. உயர்வரிசை பிறப்பு என்பது மூன்று மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்ற தாய்மார்களை குறிக்கும். மொத்த மகப்பேறு மரணங்களில் 30% உயர்வரிசை பிறப்புகளினால் நடைபெறுகிறது. மருத்துவ அலுவலர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் உயர் வரிசை பிறப்பால் ஏற்படும் விளைவுகள் குறித்து மக்களுக்கு விளக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தேவையற்ற தொடர் கருக்கலைப்பு செய்வதால் இரத்தசோகை மற்றும் கருப்பை தொடர்பான நலக்குறைவு ஏற்பட்டு தாயின் உடல்நலம் பாதிக்கப்படும் என்பது குறித்து இப்பேரணியில் பொதுமக்களிடையே விளக்கப்பட்டது. இந்நிகழ்வில், குடும்ப நல துணை இயக்குநர் (பொ) எஸ்.ஜெயந்தி, மாவட்ட இளையோர் அலுவலர் எஸ் கீர்த்தனா, வட்டார சுகாதார புள்ளியியலாளர்கள், மாவட்ட குடும்ப நல செயலக பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!