all party-meeting-perambalurபெரம்பலூர்: நடைபெறவுள்ள சட்ட மன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கு பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கும் வகையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் நந்தகுமார் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் பேசியதாவது:

பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களுக்கும் அனுமதி பெறப்பட வேண்டும். அதனை வாகனத்தின் முகப்பில் ஒட்டப்படவேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் அனுமதி பெறப்படவில்லை எனக்கருதி வழக்கு பதிவு செய்யப்படும். மேலும் மேற்படி அனுமதி பெறாத வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் முடியும்வரை திருப்பி அளிக்கப்படமாட்டாது.

கட்சி கொடியினை வாகனத்தில் கட்டுவதற்கு தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டத்தின்படி வட்டார போக்குவரத்து அலுவலரிடம் அனுமதி பெறப்படவேண்டும். மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாகன அனுமதி பெறும் இடத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் வாகன ஆய்வாளர்கள் இதற்கான அனுமதியினை வழங்க நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

அனுமதி பெற்று தனியார் சுவர்களில் செய்யப்படும் விளம்பரங்கள் அனுமதி அளவை விட அதிகமாக இருக்கக் கூடாது. கூடுதலாகவும் எழுதக் கூடாது. அவ்வாறு எழுதி இருப்பின் அதற்கான செலவும் வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்பட்டு வழக்கும் பதியப்படும்.

தேர்தல் நடத்தை விதிமீறல் உள்ளிட்ட புகார் தொடர;பான விவரங்களை மாவட்ட ஆட்சியரகத்தில் ஏற்படுத்தப்பட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் : 1800 425 7031 என்ற தொலைபேசியில் தெரிவித்திடலாம்.

ஒரு தொகுதியின் ஒரு வேட்பாளரின் அதிகபட்ச செலவு ரூ.28, லட்சம் ஆகும். நிர்ணயிக்கப்பட்ட வரம்பினை மீறி செலவு செய்யப்படும் பட்சத்தில் 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 77(3) மற்றும் பிரிவு 123(6)ன்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

செலவு கணக்குகளை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தேர்தல ஆணைய பார்வையாளர் ஆகியோர் கோரும்போது தணிக்கைக்கு ஆஜர்படுத்தவேண்டும். தேர்தல் முடிவு வெளியிடப்பட்ட 30 தினங்களுக்குள் தேர்தல் செலவின கணக்கினை வேட்பாளர் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்யவேண்டும்.

தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தல் செலவினங்களை பராமரிப்பிற்காக உரிய வங்கி கணக்கு துவக்க வேண்டும்.

வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு குறைந்தது ஒரு நாள் முன்னதாக இக்கணக்கு துவங்கப்பட்டிருக்க வேண்டும்.

வேட்பு மனு தாக்கல் செய்யும் நாளில் வங்கி கணக்கு எண், வங்கி பெயர், வங்கி கிளை உள்ளிட்ட (PassBook முதல் பக்கத்தின் நகல் உட்பட) விவரங்களை எழுத்துப் பூர்வமாக சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிக்கவேண்டும்.

தேர்தலுக்கான அனைத்து வரவு செலவுகளையும் இவ்வங்கி கணக்கிலிருந்து மட்டுமே வைப்பீடு வைக்கப்பட்டு செலவினங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வேட்பாளர்கள் தற்போது பயன்படுததும் எந்தவொரு வங்கி கணக்கையும் தேர்தல் வரவு செலவு நோக்கத்திற்காக பயன்படுத்தக் கூடாது. மேற்சொன்னவாறு தனியாகவோ அல்லது தேர்தல் முகவருடனோ இணைந்து புதிய வங்கி கணக்கினைப் பயன்படுத்தலாம். முகவர் அல்லாத எவர் ஒருவருடனும் கூட்டுக் கணக்கு வைக்கக் கூடாது.

வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, ஒவ்வொரு வேட்பாளரும் தன்னுடைய குடும் உறுப்பினர்களின் வங்கி கணக்கு விவரங்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் எழுத்துப் பூர்வமாக அளிக்க வேண்டும்.

தேர்தல் நடத்தும் அலுவலரது அலுவலகத்திற்கு வேட்பு மனு தாக்கல் செய்யவரும் வேட்பாளர் அலுவலக வளாக 100 மீட்டர் சுற்றளவிற்குள் அவரது சார்பாக 3 வாகனங்களில் வேட்பாளர் உட்பட 5 (1+4) நபர்களை மட்டும் அழைத்துக்கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்.

இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிள் ரிக்ஷா ஆகியன ”வாகனங்கள்” என்ற வரையறைக்குள் உட்பட்டதாகும். ஒலிபெருக்கிகளை உபயோகிக்க அனுமதியில்லை. மேற்சொன்ன விதியினை மீறி வரப்பெறும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் முடியும்வரை விடுவிக்கப்படமாட்டாது.

வேட்பு மனுவுடன் படிவம்-26ல் கண்டுள்ள விவரங்களை உறுதிமொழி ஆவணமாக தாக்கல் செய்யவேண்டும். இதில் கோரப்பட்ட விவரங்களை விடுபாடின்றி பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலரால் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை என அறிவிக்கப்பட்ட பின்பு தாக்கல் செய்யப்படும் ஆவணத்தில் குறைபாடு காணப்படின் வேட்பு மனுவினை தள்ளுபடி செய்ய நேரிடும்.

வேட்பு மனு தாக்கல் செய்யும்பொழுது வேட்பு மனுவுடன் வழக்கம்போல் தாக்கல் செய்யும் உறுதிமொழி ஆவணத்துடன் கூடுதலாக அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய பாக்கி ஏதுமில்லை (No Demand Certificate) என்ற சான்றினை தேர;தல் ஆணையம் நிர்ணயித்துள்ள படிவத்தில் கூடுதலாக மற்றுறொரு உறுதிமொழி பத்திரத்தினையும் தாக்கல் செய்யப்படவேண்டும்.

வேட்பாளரின் புகைப்படத்தை வாக்குச்சீட்டில் அச்சிட வேண்டியுள்ளதால் வேட்பாளர் தனது மூன்று மாதங்களுக்குள் எடுக்கப்பட்ட 3செமீ x 2.5செமீ அளவுள்ள பாஸ்போர்ட் அளவு கொண்ட கலர் அல்லது கருப்பு வெள்ளை புகைப்படத்தை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கொடுக்கப்பட வேண்டும்.

வேட்புமனு தாக்கல் செய்வது குறித்த வேட்பாளர்களின் சந்தேககங்களை நிவர்த்தி செய்ய தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அலுவலகத்தில் துணை ஆட்சியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் பொழுது மேற்சொன்ன விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.மீனாட்சி, அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!