The Sports ceremony at the Chinna itham Padal Meenakshi Matriculation School: Village students are a great achievement

ராமநாதபுரம் சத்திரக்குடி சின்னஇதம்பாடல் கிராமத்தில் மீனாட்சி மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியில் முதலாம் ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் வெகு விமர்சையாக நடந்தது.

ராமநாதபுரம் சத்திரக்குடி சின்னஇதம்பாடல் கிராமத்தில் மீனாட் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி கடந்தாண்டு துவங்கப்பட்டது. இப்பள்ளியின் முதலாம் ஆண்டு விளையாட்டு விழா பள்ளி சேர்மன் கோவிந்தன் தலைமையில் நடந்தது. விழாவில் பள்ளி மாணவர்கள் நான்கு குழுக்களாக பிரிந்து தேசிய கொடி மற்றும் விளையாட்டு விழாவை வெளிகாட்டும் ஒலிம்பிக் கொடிக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து நான்கு குழுவை சேர்ந்த குழு தலைவர் மற்றும் பள்ளி விளையாட்டு தலைசிறந்த வீரர்கள் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி விளையாட்டு மைதானத்தை சுற்றிவந்து ஒலிம்பிக் கம்பத்தில் தீபம் ஏற்றினர். பின் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி, கிண்டர் கார்டன் குழந்தைகளின் டிரில் விளையாட்டு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. கிண்டர் கார்டன் குழந்தைகளின் திறமையை பாராட்டி அவர்களுக்கு பள்ளிக்கு வந்த பெற்றோர் அல்லாத விருந்தினர்கள் மெடல் அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விழாவில் தாளாளர் மகேந்திரன் வரவேற்று பேசுகையில், கிராமங்கள் தோறும் சென்னை மற்றும் பெரும் நகரங்களில் கிடைக்கக்குடிய உயர்தர கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சின்னஇதம்பாடல் கிராமத்தில் மெட்ரிக் பள்ளியை துவங்கி சென்னைக்கு நிகராக மாணவர்களுக்கு கல்வியுடன் விளையாட்டு,கலை, பேச்சுதிறன், பொது அறிவு என அனைத்திலும் திறம்பட மாணவர்கள் இருக்க அந்தந்த பிரிவுகளில் சிறந்த சிறப்பு ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு கற்றுத்தருகிறோம். கட்டணம் குறிக்கோள் அல்ல கிராமப்புற மாணவர்களின் திறமைகளையும் வெளி கொணர வேண்டும் என்ற சேவைமனப்பான்மையில் துவங்கினோம்.

எங்களது முயற்சிக்கு கிராமத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பள்ளி துவங்கிய ஆண்டிலேயே நுாற்றுகணக்கான மாணவ மாணவிகள் சேர்ந்துள்ளனர். அதுமட்டுமின்றி எல்கேஜி முதல் உயர்நிலை வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் ஒவ்வொரு பிரிவுகளின் திறமையுடன் உள்ளனர். அவர்களின் திறமைகளை கண்டறிந்து வெளிகொணர்ந்து வருகிறோம். இதற்கு பெற்றோர்கள், ஊர் தலைவர்கள், கிராமத்தினர், மாணவர்கள், கல்வித்துறையினர் போன்ற பலரின் உதவிகள் உறுதுணையாக இருந்தது. இன்று நாங்கள் விதைத்துள்ள விதை விருட்சமாக வளர்ந்து நாளை ஒலிம்பிக் போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் இடம்பெறும் வகையில் முன்னேற்றுவோம் என்ற உன்னத நம்பிக்கை இந்தாண்டு விளையாட்டு விழாவில் முலம் தெளிவாக தெரிகிறது, என்றார்.

பள்ளி முதல்வர் செந்தில்முருகன் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் பங்கேற்ற ராமநாதபுரம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் வெங்கடேச பெருமாள் பேசும்போது, நான் இப்பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக வந்து பங்கேற்று சில நிமிடங்களில் கிளம்பி செல்லலாம் என நினைத்து வந்தேன். ஆனால் சுட்டெரிக்கும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் பகல் இரண்டு மணிக்கு மாணவர்கள் கம்பீரமாக நின்று தேசிய கொடிக்கும், ஒலிம்பிக் கொடிக்கும் அணிவகுப்பு மரியாதை செலுத்திய விதம் ராணுவ மற்றும் போலீசார் கம்பீரமாக செல்வது போல் மிடுக்குடன் மாணவர்கள் சென்றது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. கிராமத்தில் உள்ள மாணவர்கள் இதுபோல் சற்றும் சலிக்காமல் மிடுக்குடன் செல்ல அவர்களுக்கு சிறந்த பயிற்சி வழங்கிய பள்ளி நிர்வாகத்தை வெகுவாக பாராட்டுகிறேன்.

அதேபால் கிராமங்களில் உள்ள குழந்தைகளின் கலைதிறனையும் வெளிகொணரும் வகையில் பரதநாட்டிய நிகழ்ச்சியை கற்றுத்தந்து மிக அற்புதமாக நடனமாடிய மாணவ மாணவிகளை வெகுவாக பாராட்ட வேண்டும். மாணவர்களின் திறமையை கண்டு விழா முடியும் வரை என்னை ஒரு இருக்கையில் அமர வைத்து மாணவர்கள் சிறப்பாக தங்கள் திறமையை வெளிப்படுத்தி உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் வருங்காலத்தில் மிகச்சிறந்த நிலைக்கு வருவார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை, என்றார்.
தொழிலதிர் ஜே.எஸ்.கே.லோகிதாஸ் உட்பட ஊர்பிரமுகர்கள், பெற்றோர்கள், சுற்றுவட்டார கிராமத்தினர் பங்கேற்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!