பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு தேவையான கடனுதவிகள் வழங்க வங்கியாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் (பொ) ப. மதுசூதன் ரெட்டி.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், அனைத்து வங்கியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியர் மேலும் பேசியதாவது:

பெரம்பலூர் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் நிகழாண்டில் 75 நபர்களுக்கு ரூ. 37.50 லட்சம் மானியமாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 40 நபர்களுக்கு சென்ட்ரிங், தையல், ஒளி -ஒலி அமைப்பு, அழகு நிலையம், போட்டோ ஸ்டுடீயோ, கணினி நிலையம், வாடகை பாத்திரக் கடை ஆகிய சேவை தொழில்களுக்கும், மர சாமான்கள் உற்பத்தி, ரெக்ஸிங் சீட் கவர், அச்சகம், ஸ்டீல் நாற்காலி, மேஜை உள்ளிட்ட பொருள்கள் உற்பத்தி செய்ய ரூ. 12.85 லட்சம் மானியத்துடன் கடனுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில், 15 நபர்களுக்கு ரூ. 32.90 லட்சம் மானியமாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் 11 நபர்களுக்கு வாடகை பாத்திரக் கடை, ப்ளை ஆஸ் கற்கள் உற்பத்தி, பேக்கரி பொருள்கள் ஆகிய தொழில் தொடங்க ரூ. 22.08 லட்சம் மானியத்துடன் கடன் வழங்க வங்கி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில் 7 நபர்களுக்கு ரூ. 70 லட்சம் மானியமாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 6 நபர்களுக்கு கூரை தகடு உற்பத்தி, கம்ப்யூட்டர் அனிமேசன், பிளாஸ்டிக் கிரானியூல், ப்ளை ஆஸ் கற்கள் ஆகிய பொருள்கள் தயாரிக்க ரூ. 47.80 லட்சம் மானியத்துடன் கடன் வழங்க வங்கி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில்வளம் பெருக தொழில் தொடங்க உள்ள இளைஞர்களுக்கு வங்கியாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பேசினார்.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், தமிழக அரசு மூலம் வங்கியாளர்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் செயல்பாடுகள், மாணவ, மாணவிகளுக்காக நடைபெற உள்ள கல்விக்கடன் முகாம், விவசாயிகளுக்காக நடைபெற உள்ள பயிர்க் கடன் வழங்கும் முகாம் குறித்து வங்கியாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில், ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் நடராஜன்பாலு, நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் ல.சா. நவீன்குமார், இந்தியன் வங்கி தஞ்சை மண்டல முதன்மை மேலாளர் நா. கஜேந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பா. அருள்தாசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி உள்பட பலர் பங்கற்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!