E-service centers for the new voter ID card can be obtained free of charge

இ-சேவை மையங்களில் புதிய வாக்காளர்களுக்கான அடையாள அட்டையை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்

2017 ஜனவரி 1 ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி வரைவுப் பட்டியல் வெளியீட்டுடன் தொடங்கியது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் மற்றும் இடமாற்றம் செய்ய விண்ணப்பங்கள் கடந்த ஆண்டு 01.09.2016 முதல் 30.09.2016 ஆம் தேதி வரை பெறப்பட்டன. மேற்படி சுருக்க திருத்த பணியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக பெறப்பட்ட படிவங்களின் பேரில் 10884 வாக்காளர்கள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 5475 ஆண் வாக்காளர்களும், 5409 பெண் வாக்காளர்களும் உள்ளனர். இறப்பு, இரட்டை பதிவு மற்றும் இடப்பெயற்சி காரணமாக 147- பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 264 வாக்காளர்களும், 148-குன்னம் சட்டமன்ற தொகுதியில் 114 வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின்போது அச்சிடப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் அந்தந்த பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது. தற்போது புதிய வாக்காளர்களுக்கு அரசு இ-சேவை மையங்கள் மூலம் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பத்தில் தங்களின் கைப்பேசி எண்ணை அளித்துள்ள புதிய வாக்காளர்களுக்கு ஒரு தனிப்பட்ட அடையாள எண் தலைமை தேர்தல் அலுவலகத்தின் மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. இந்த அடையாள எண்ணை தங்கள் தொகுதிக்குட்பட்ட வட்ட அலுவலகங்களில் செயல்படும் அரசு இ-சேவை மையத்தில் காண்பித்து புதிய வாக்காளா; புகைப்பட அடையாள அட்டையை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

இதற்காக புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. தங்களுடைய கைப்பேசி எண்ணை அளிக்காத புதிய வாக்காளர்கள், தலைமை தேர்தல் துறையின் கட்டணமில்லா உதவி எண்.1950-ஐ தொடர்பு கொண்டு கைப்பேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கும் அடையாள எண் அனுப்பப்படும். அவர்களும் தங்களுடைய ஏதேனும் ஒரு புகைப்பட அடையாளச் சான்றை காண்பித்து அரசு இ-சேவை மையங்களில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!