NLC land plunge: PM Neyveli on 26th Scramble! Ramadoss’s announcement

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :

நெய்வேலியில் மூன்றாவது நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத்தும் முடிவை கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியும், அப்பகுதி மக்களும் வலியுறுத்தி வரும் நிலையில், மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சி நிர்வாகமும் நிலங்களை வளைக்கும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. மக்களின் நலனில் அக்கறையற்ற என்.எல்.சி நிர்வாகத்தின் இந்த சுரண்டல் போக்கு கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டிற்கு மின்சாரமும், வேலைவாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், நெய்வேலி பகுதியைச் சேர்ந்த 23 கிராம மக்கள் தங்களின் நிலங்களைக் கொடுத்ததால் அமைக்கப்பட்ட என்.எல்.சி நிறுவனம் இப்போது அதன் நோக்கங்களை மறந்து, தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இணையாக மக்களைச் சுரண்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. ஏற்கனவே சுரங்கம் 1, சுரங்கம் 1-ஏ, சுரங்கம் 2 என 3 நிலக்கரி சுரங்கங்களை என்.எல்.சி அமைத்துள்ளது. இதன்மூலம் கிடைக்கும் நிலக்கரியில் தனது தேவைக்கு போக மீதமுள்ள நிலக்கரியை மற்ற நிறுவனங்களுக்கு விற்பனை செய்து பெரும் லாபம் ஈட்டி வருகிறது. இவை போதாதென சுரங்கம்-3 என்ற பெயரில் நான்காவது சுரங்கம் அமைக்க முடிவு செய்து அதற்காக பெருமளவு நிலங்களைக் கையகப்படுத்த உத்தேசித்துள்ளது.
.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இப்போது 3 சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அதன்மூலம் கிடைக்கும் நிலக்கரியில் குறிப்பிடத்தக்க அளவு வெளி நிறுவனங்களுக்கு விற்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி, ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 10,000 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன. இவற்றை வைத்துப் பார்க்கும் போது அடுத்த சில பத்தாண்டுகளில் என்.எல்.சி நிறுவனம் அதன் மின்சார உற்பத்தித் திறனை எந்த அளவுக்கு அதிகரித்தாலும், அதற்குத் தேவையான நிலக்கரியை இப்போதுள்ள சுரங்கங்கள் மற்றும் நிலங்களில் இருந்தே பெற முடியும். அவ்வாறு இருக்கும் போது சுரங்கம்&3 அமைப்பதற்கான தேவை என்ன?

புதிய நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் என்.எல்.சி நிர்வாகம் கையகப்படுத்தவுள்ள நிலங்களின் பரப்பு 12,125 ஏக்கர் ஆகும். இந்த நிலங்கள் தான் அப்பகுதிகளில் உள்ள 26 கிராமங்களைச் சேர்ந்த உழவர்களின் வாழ்வாதாரமாக திகழ்கின்றன. மலைக்காய்கறிகள் உள்ளிட்ட அனைத்துப் பயிர்களும் விளையக்கூடிய இந்த நிலங்களில் இருந்து ஓர் ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்ட முடியும். இவ்வளவு வளமான நிலங்கள் நிலக்கரி சுரங்கத்திற்காக பறிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்க நேரிடும்.

ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடும், அவற்றின் உரிமையாளர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படாத நிலையில், கூடுதலாக பல்லாயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பறிக்க என்.எல்.சி நிறுவனம் துடிப்பதும், அதற்கு தமிழக ஆட்சியாளர்கள் துணை போவதும் மன்னிக்க முடியாதவை. அதனால் தான் சுரங்கம் -3 அமைக்கும் திட்டத்தையும், அதற்காக நிலங்களை பறிக்கும் திட்டத்தையும் கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், என்.எல்.சி நிறுவனமோ எந்த வித சமூகப் பொறுப்பும், அக்கறையும் இல்லாமல் நிலங்களை பறிக்க வேண்டும்; நிலக்கரி சுரங்கம் அமைத்து அதிக வருவாய் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இதற்கும் மக்களைச் சுரண்டும் கார்ப்பரேட்களுக்கும் வித்தியாசம் இல்லை.

தமிழகத்தின் வளங்களை சுரண்டி லாபம் பார்க்கும் என்.எல்.சி நிறுவனம் நெய்வேலி பகுதி மக்களின் நலனுக்காக எதையும் செய்வதில்லை. என்.எல்.சி நிறுவனத்தின் லாபத்திலிருந்து செலவழிக்கப்பட வேண்டிய சமூகப் பொறுப்புடைமை நிதியைக் கூட நெய்வேலி மக்களின் நலனுக்காக செலவிடாமல், அந்த நிறுவனத்தின் தலைவராக பதவி வகிப்பவரின் மாநிலங்களில் செலவிடும் அளவுக்கு அதன் மனசாட்சி இறுகிப் போயிருக்கிறது. இப்படிப்பட்ட நிறுவனத்தின் விரிவாக்கத்திற்காக நெய்வேலி பகுதியில் உள்ள 26 கிராம மக்களின் வாழ்வாதாரங்களை இழக்க முடியாது. மாறாக, நெய்வேலியில் சுரங்கம்&3 அமைக்கும் திட்டத்தை என்.எல்.சி நிறுவனமும், தமிழக ஆட்சியாளர்களும் உடனே கைவிட வேண்டும்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 26-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.00 மணிக்கு நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், தருமபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றவுள்ளார். இப்போராட்டத்தில் நெய்வேலி பகுதியை சேர்ந்த மக்களும், தொண்டர்களும் பெருமளவில் பங்கேற்பர், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!