சென்னை: தமிழகத்தில் தஞ்சை பெரிய கோயில் உட்பட 245 சுற்றுலா மையங்களில் விரைவில் இணைய சேவையான வைபை வசதி கிடைக்கும் என தமிழ்நாடு தொலைத் தொடர்பு நிறுவன முதன்மை தலைமை மேலாளர் ஜி.வி.ரெட்டி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது.. தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்டத்தின் சார்பில் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள சுற்றுலா மையங்களிலும், பொழுது போக்கு மையங்களில் கம்பியில்லா இணைய சேவையான வைபை வசதி வழங்கி முடிவு செய்துள்ளது.

இந்த சேவையின் மூலம் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் அதிகவேக இணையச் சேவையை பெற முடியும். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வேகம், தரம் காரணமாக இணைய சேவையில், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

வீடுகள், நிறுவனங்களுக்கு அளித்து வந்த சேவை, இப்போது சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு மையங்கள் பொது இடங்களில் வழங்கும் பணிகளில் இறங்கியுள்ளோம்.

அதற்காக தமிழகம் முழுவதும் 245 முக்கிய இடங்களை தேர்வு செய்துள்ளோம். அந்த இடங்களில் இந்த ஆண்டுக்குள் வைபை வசதி கிடைக்கும்.

முதல் கட்டமாக 100 இடங்களில் இந்த வசதியை உடனடியாக மேற்கொள்ள உள்ளோம். தஞ்சாவூரில் உள்ள பெரிய கோயில், குன்னூரில் சிம்ஸ் பூங்கா, உதகையில் தாவரவியல் பூங்கா, மதுரையில் மீனாட்சியம்மன் கோயில், கும்பகோணம் உப்பிலியப்பன் கோயில், ராகு கோயில், கோவையில் டைடல் பூங்கா, ஆர்எஸ்புரம், புதுச்சேரி மாநிலத்தில் பாரதி பூங்கா, தலைமைச் செயலகம், லீ கபே, படகு இல்லம் என முக்கிய சுற்றுலா, பொழுது போக்கு இடங்கள், கோயில்களில் இந்த வசதி கிடைக்கும். இந்த வசதியை ஆன்லைனில் கட்டணம் செலுத்தி பெறலாம்.

இல்லாவிட்டால் 30, 50, 90 மற்றும் 150 ரூபாய்களில் கூப்பன்களை வாங்கியும் பயன்படுத்தலாம். இவற்றுக்கு முறையே தலா 30, 60,120 நிமிடங்கள் மற்றும் 24 மணி நேரம் பயன்படுத்தலாம்.

இவை தவிர முதல் 30 நிமிடங்கள் கட்டணமின்றி வைபை சேவையை இலசமாக பெறலாம். அதன்பிறகு கட்டணம் வசூலிக்கப்படும்.

இதுபோன்ற முதல் 30 நிமிட இலவசமாக பயன்படுத்தும் வசதி ஒரு எண்ணுக்கு 3 முறை மட்டுமே கிடைக்கும். இவ்வாறு தமிழ்நாடு தொலைத் தொடர்பு நிறுவன முதன்மை தலைமை மேலாளர் ஜி.வி.ரெட்டி தெரிவித்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!