11 direct paddy procurement stations will be opened in Veppanthatta and Kunnam circles; Perambalur Collector Information!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கற்பகம் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வேளாண்மை சார்ந்த திட்டங்கள் குறித்து தொடர்புடைய துறைகளின் முதல்நிலை அலுவலர்கள் விரிவாக எடுத்துரைத்தனர். மேலும், திட்டங்கள் குறித்த விவசாயிகளின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளித்தனர்.

இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் பேசுகையில் மக்களை நாடி குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காணும் திட்டமான “உங்களைத் தேடி உங்கள் ஊரில்“ என்ற சிறப்பான திட்டத்தை செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சருக்கு விவசாயிகளின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தனர்.

ராஜீ பேசிய போது: கை.களத்தூர் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கொடுத்தமைக்கு நன்றி தெரிவித்தார். ராமராஜன் : கோனேரிப்பாளையம் அருகே கல்லாற்றில் தடுப்பணைகள் கட்டித்தர வேண்டுமென கேட்டுக்கொண்டார். வி.ஜெயராமன் பேசுகையில் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிர்களுக்கு நிவாரணம் மற்றும் காப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், வரதராஜன் பேசுகையில் அ.மேட்டூர் முதல் கவுண்டர்பாளையம் வரை உள்ள சாலையை சீரமைக்க வேண்டுமெனவும், விநாயகம் பேசுகையில் தெரணி கிராமத்தில் தெரு நாய்களால் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய வேண்டுமெனவும், விசுவநாதன் பேசுகையில் வெங்காய கொட்டகை அமைக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்கள்.

தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ஆர்.ராஜாசிதம்பரம் பேசுகையில் ஈச்சம்பட்டி அருகே மடத்துவாரி ஆற்றில் தடுப்பணை கட்டித்தர வேண்டுமெனவும், ரமேஷ் பேசுகையில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு வன விலங்குகளால் விவசாய பயிர்கள் சேதம் அடைவதை தடுக்க மின்வேலி அமைத்து கொடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.

அதனைத்தொடர்ந்து, விவசாயிகளின் கோரிக்கைகள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தின் வருடாந்திர சராசரி மழையளவு 861 மி.மீ, ஆகும். 2024 ஜனவரி மாதம் பெய்ய வேண்டிய மழையளவு 16 மி.மீ., பெய்த மழையளவு 29.18 மி.மீ, ஆகும். பயிர் சாகுபடி பரப்பை பொறுத்தவரை தற்சமயம் 89,767 எக்டர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விதை கொள்முதலை பொறுத்தவரை விவசாயிகள் பயன்பாட்டிற்காக நெல் 0.685 மெ.டன்கள் இருப்பில் உள்ளது. சிறுதானியங்களில் 1.762 மெ.டன்கள், பயறு வகைகளில் 1.934 மெ.டன்கள், எண்ணெய் வித்து பயிர்களில் 2.051 மெ.டன்கள் இருப்பில் உள்ளது.

தோட்டக்கலை துறையின் மூலமாக தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் முருங்கை பரப்பு அதிகரித்தல், கல்பந்தல் அமைத்தல் பணிகளும், மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தில் மாடித்தோட்ட தளைகள், பழச்செடிகள் தொகுப்புகள் வழங்குதல், பண்ணை கருவிகள் மற்றும் உபகரணங்கள் விநியோகம் மற்றும் காளான் குடில் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.

வேளாண்பொறியியல் துறை மூலமாக உழுவை வாடகை திட்டம், வேளாண்மை இயந்திரமயமாக்கல் உப இயக்கம் – தனிநபர் விவசாயிகளுக்கு மானியம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டங்களில் உருவாக்கப்பட்ட அமைப்புகளை தூர்வாருதல், மின்மோட்டார் மாற்றிக்கொள்ள மானியம் வழங்குதல் போன்ற பணிகளும் நடைபெற்று வருகிறது.

மேலும் விவசாயிகளின் கோரிக்கைகள் படிபடியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் விவசாயிகளின் நீண்ட நாட்களாக தங்களது பகுதிக்கு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து தர கோரியிருந்தனர். அதனை நிறைவேற்றும் வகையில் குன்னம் மற்றும் வேப்பந்தட்டை வட்டாரங்களில் 11 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் பிப்ரவரி மாதம் திறக்கப்படவுள்ளது. மேலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். வீடு இல்லாதவர்களுக்கு ஆய்வு செய்து இலவச வீட்டுமனை பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் அரசு பணியாளர்கள், உழவர்கள் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!