15 pounds 30 thousand theft in 3 houses in the district of Perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பூட்டியிருந்த 3 வீடுகளில் 15 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பரமேஸ்வரன் மனைவி வெண்ணிலா (வயது 50), இவரது கணவர் உடல் நிலை சரியில்லாததால் துறையூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வீட்டை பூட்டி விட்டு துறையூர் சென்றிருந்தார். நேற்று காலை வீட்டின் பூட்டை உடைக்கப்பட்டு வீடு திறந்து இருப்பது கண்டு அக்கம்பத்தினர் கொடுத்த தகவலின் பேரில் வெண்ணிலா வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டில் வைத்திருந்த 10 பவுன் நகை மற்றும் ரொக்கம் 5 ஆயிரம் திருடு போய் இருப்பது தெரியவந்தது. இது குறித்து பெரம்பலூர் போலீசில் புகார் கொடுத்தார்.
இதே போன்று பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூர் ராசி நகரைச் சேர்ந்தவர் முருகன் (60) ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டை பூட்டிக் கொண்டு தனது சொந்த ஊரான வயலலூருக்கு குடும்பத்துடன் சென்று விட்டார்.
நேற்று காலை அகரம்சீகூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது. இதைப் பார்த்த அதிர்ச்சி அடைந்த முருகன் வீட்டில் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 10 சவரன் நகைகளும், 15ஆயிரம் ரொக்கமும் யாரோ மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதே போல் ராசி நகரில் வசிப்பவர் இளவரசி (45) இவரது ஓட்டு வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரொக்கம் 10ஆயிரம் திருடு போயிருந்தது. இதுகுறித்து முருகன், மற்றும் இளவரசி இருவரும் மஙகளமேடு காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மங்களமேடு, மற்றும் பெரம்பலூர் போலீசார், தடய அறிவியல் துறையினரை கொண்டு கொள்ளை போன வீடுகளில் கைரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.