+2 General Exam, March – April 2018: Those who want to can apply online
பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்மொழிதேவி விடுத்துள்ள தகவல் :
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மார்ச் – ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுத தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தவறிய, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) ஆன்லைனில் விண்ணப்பிக்கவேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், அரசு தேர்வுத் துறை சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களான அரசு மேல்நிலைப் பள்ளி பெரம்பலூரில் ஆண்களுக்கும் மற்றும் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண்களுக்கும் 04.01.2018 முதல் 06.01.2018 வரை அனைத்து மூன்று தினங்களிலும் நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வர்கள் தனியார் பிரவுசிங் சென்டர்கள் மூலம் விண்ணப்பிக்க இயலாது. தேர்வுக் கட்டணத் தொகை ரெஜிஸ்ட்ரேசன் ஸ்லிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும். “எச்” வகை (H) தனித்தேர்வர்கள் ஒரு பாடத்திற்கு ரூ.50- (இதர கட்டணம் ரூ.35-), “எச்.பி” வகை (HP) நேரடித் தனித் தேர்வர்கள் ரூ.150+37 = ரூ.187- இவற்றுடன் கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.1000- மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50-ஐ பணமாக மட்டுமே அரசுத் தேர்வுத் துறை சேவை மையத்தில் செலுத்த வேண்டும்.
தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்பபடும்.
இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவுரைகளின்படி (தேர்வுக் கட்டண விவரம் தவிர்த்து) வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் பாடங்கள் வகைப்பாடு அறிந்து அதன்படி விண்ணப்பிக்க வேண்டும்.
தனித்தேர்வர்களுக்குத் தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது. தனித் தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும், என தெரித்துள்ளார்.