3 places in the district cooperative union election postponement: Poll booth beaten road blockade by the DMK



பெரம்பலூர் மாவட்டத்தில் அதிமுக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உறுப்பினர் தேர்தலில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தால் காரை, கிருஷ்ணாபுரம், வெங்கனூர், பூலாம்பாடி பகுதிகளில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் உறுப்பினர் தேர்தலுக்கான பணிகள் கடந்த சிலதினங்களுக்கு முன்பு தொடங்கி வேட்புமனுதாக்கல், மனு வாபஸ் உள்ளிட்ட பணிகள் முடிவடைந்தது.

இதில் அ.தி.மு.க-தி.மு.க இடையே நேரடி போட்டி ஏற்பட்டது. இதில் தி.மு.க வினருக்கே வெற்றி வாய்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை கிருஷ்ணாபுரம் தொடக்கவேளாண்மை கூட்டுறவு வங்கியில் தேர்தல் தொடங்கியது. அப்போது அங்கு வந்த சிலர் தேர்தல் நடக்கும் அறைக்குள் புகுந்து அங்கிருந்த டேபிள், சேர், ஓட்டுப்பெட்டி ஆகியவற்றை அடித்து உடைத்து நொறுக்கினர்.

தொடர்ந்து வாக்குச்சீட்டு உட்பட தேர்தல் தொடர்பான பதிவேடுகளையும் கிழித்து தீ வைத்து கொளுத்தினர். இந்த செயலால் அந்த பகுதியே போர்க்களமானது. இதனால் அதிர்ச்சியடைந்த தி.மு.க வினர் அக்கட்சியின் மாவட்டசெயலாளர் ராஜேந்திரன் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் பாஸ்கர், ஒன்றிய செயலாளர்கள் நல்லத்தம்பி, ஜெகதீசன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆத்தூர்-பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீர் சாலைமறியலில் ஈடுப்பட்டனர்.

இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீஸ் துணை சூப்பிரண்டு ஞான. சிவகுமார் தலைமையிலான போலீசார் சாலைமறியலில் ஈடுப்பட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திமுகவினர் தற்போது அதிமுவினர் கலவரத்தை ஏற்படுத்தி தேர்தலை ரத்து செய்துவிட்டு தங்கள் கட்சியினர் வெற்றி பெற்றதாக அறிவித்து விடவேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகின்றனர். எனவே, தேர்தலை ரத்து செய்யாமல் மீண்டும் தேர்தலை நடத்துவோம் என கூட்டுறவு துறை அதிகாரிகள் உத்திரவாதம் கொடுத்தால்தான் மறியலை கைவிடுவோம் என்றனர். அதனை தொடர்ந்து தேர்தல் அதிகாரி மணிமேகலை தேர்தலை ரத்து செய்யாமல் ஒத்திவைப்பதாக கூறினார். அதனை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். இதனால் ஆத்தூர்-பெரம்பலூர் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதேபோல் வேப்பந்தட்டை தாலுகா பூலாம்பாடி மற்றும் வெங்கனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலும் அதிமுக வினர் தேர்தலை நடத்தவிடாமல் ரகளையில் ஈடுப்பட்டனர். இதனால் அங்கும் தேர்தல் நடக்காமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதே போன்று காரை கிராமத்திலும் தகராறு ஏற்பட்டதால், அங்கும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

மேலும், இன்று மாலை நான்கு மணிக்கு மேல் திமுகவினர் பெரம்பலூரில் உள்ள கூட்டுறவு சங்க பதிவாளர் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்தினர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!