50% reservation in medical colleges for government school students: DASE

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 50 சத இட ஒதுக்கீடு : எம்.சி.ஐ விதிமுறைகளிலும் திருத்தம் கொண்டுவர வேண்டுமென சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் .ஜி.ஆர்.இரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கை :

கடந்த 10 ஆண்டுகளாக மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 30 மாணவர்கள் மட்டுமே அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் , மருத்துவக் கல்லூரிகளில் சேர்கின்றனர்.

அரசுப்பள்ளிகளின் தரம் குறைவாக இருத்தல், ஆசிரியர் பற்றாக்குறை, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமை, அடிப்படை வசதிகள் இல்லாமை, தனியார் பள்ளிகள் எண்ணிக்கையில் அதிகரிப்பது போன்றவை இதற்குக் காரணமாக உள்ளன.

மேலும், அரசுப் பள்ளிகளில் படித்து 10 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை சில தனியார் பள்ளிகள், தங்கள் பள்ளிகளில் அவர்களை இலவசமாக சேர்த்துக் கொள்கின்றன.

தனியார் பள்ளிகளுக்கு இடையே உள்ள தொழில் போட்டியே இதற்குக் காரணம்.

தனியார் பள்ளிகள் தேர்வுகளின் போது முறைகேடான செயல்களிலும் ஈடுபட்டு தங்கள் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உதவுகின்றன.

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் குறைவான எண்ணிக்கையில் சேர்வதற்கு, இவையெல்லாம் காரணமாக இருந்த போதிலும் ,அரசுப்பள்ளிகளின் கல்வித்தரம் மோசமாக இருப்பதே இந்நிலைக்கு அடிப்படைக் காரணம்.

எனவே, அரசுப்பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீட் நுழைவுத் தேர்வின் காரணமாக, இந்த ஆண்டு அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்கள் வெறும் 5 பேர் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் .

.அதாவது தமிழக அரசின் ஒதுக்கீட்டு இடங்களான 3534 இடங்களில் வெறும் 5 இடங்களை மட்டுமே அரசுப் பள்ளி மாணவர்கள் பெற்றுள்ளனர். இத்தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

எனவே, நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழக அரசின் ஒதுக்கீட்டு இடங்களுக்கு நிரந்தர விலக்கு வழங்க வேண்டும்.

ஆனால், நீட்டிலிருந்து விலக்கு பெறுவது மட்டுமே தீர்வாக அமையாது. ஏனெனில், நீட் இல்லாத போதும் ,தமிழகத்தில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்த பொழுதும், அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருவது அரிதினும் அரிதாகவே இருந்துள்ளது.

2009 -10 கல்வியாண்டு முதல் 2016 -17 வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் வெறும் 278 பேர் தான் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

அரசுப்பள்ளிகளை மேம்படுத்த மத்திய – மாநில அரசுகள் போதிய கவனம் செலுத்தாததே இதற்குக் காரணம்.இந்நிலையில் கல்விக்காக ஒதுக்கும் நிதியும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கல்விக்காக ஜி.டி.பி யில் , அரசு 0.6 விழுக்காட்டை ஒதுக்கியது.அது இப்பொழுது 0.4 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.

இத்தகையப் போக்கு, அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவதில் மிகப்பெரும் தடைகளை ஏற்படுத்திவருகிறது.

அரசுப்பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தாததால் , அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு உயர் கல்வியில் ஏற்படும் பாதிப்பை சரி செய்ய வேண்டியப் பொறுப்பு மத்திய – மாநில அரசுகளுக்கு உள்ளது.

எனவே, அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு உயர் கல்வியில் தனி இட ஒதுக்கீடு வழங்கிட சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மத்திய – மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளிலும்,இடங்களிலும், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களிலும், 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிடவும், நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணோடு கூடுதல் மதிப்பெண் வழங்கிடவும் இந்திய மருத்துவக் கழகத்தின் விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்கனவே, டிப்ளமாக படிப்புகளில் இது போன்று இட ஒதுக்கீடு அரசு மருத்துவர்களுக்கு உள்ளது.முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு மதிப்பெண்ணில் 30 விழுக்காட்டை அரசு மருத்துவர்களுக்கு கூடுதலாக வழங்கும் நடைமுறை உள்ளது.

இவற்றிற்காக இந்திய மருத்துவக் கழகத்தின் விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அது போன்ற திருத்தை , இந்திய மருத்துவக் கழகத்தின் விதிமுறைகளில் செய்து, அரசுப்பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கும் தனி ஒதுக்கீட்டையும்,கூடுதல் மதிப்பெண்ணையும் வழங்கிட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!