Meeting with all political party representatives about the redevelopment of municipal wards in Perambalur

பெரம்பலூர் : தமிழ்நாடு மறுவரையறை ஆணைய ஒழுங்குமுறைகளின் படி 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பினை அடிப்படையாகக் கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட வார்டுகள் மறுவரையறைப் படுத்தப்பட்டுள்ளது.

மறுவரையறைபடுத்தப்பட்டுள்ள பகுதிகள் குறித்த தகவல்கள் நகராட்சி அலுவலகம், பழைய நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு, இவ்வரைவு மறுவரையறையின் மீது கருத்துருக்கள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களுடைய கருத்துருக்கள் மற்றும் ஆட்சேபனைகளை எழுத்துப் பூர்வமாக நகராட்சி ஆணையர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 02.01.2018 மாலை 5.45 மணி வரை தெரிவிக்கலாம் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாக நகராட்சி வார்டுகள் மறுவரை குறித்த கருத்துக்களை கேட்கும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடனான கூட்டம் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப்பிரதிநிதிகள் சில வார்டுகளில் மறுவரையரை செய்யப்பட்ட பகுதிகளில் மாற்றம் செய்யக்கோறும் பகுதிகள் குறித்த கோரிக்கைகளை தெரிவித்தனர்.
அனைவரின் கருத்துக்களையும் முழுமையாக கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் அவர்களது கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக எழுதிக்கொடுக்க வேண்டுமென்றும், கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், கிராம ஊராட்சி வார்டுகள், ஊராட்சி ஒன்றிய வார்டுகள் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டுகளின் மறுவரைகுறித்த கருத்துருக்களை வழங்க நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு நீட்டிக்கப்பட வேண்டும் என்ற பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கோரிக்கையினை ஏற்று ஊராட்சி வார்டு மறுவரையரை குறித்த கருத்துருக்களை வழங்க 5.1.2018 மாலை 5 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

எனவே, ஊராட்சி வார்டு குறித்த மறுவரையறை குறித்த கருத்துக்களை சம்மந்தப்பட்ட வார்டு மறுவரையரை அலுவலரிடமோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்திலோ அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் அரசாங்க பணியாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!