Analysis of Preparation for Group 2A Exam
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெறவுள்ள குரூப் 2ஏ தேர்வு அல்லாத பதவிகளுக்கான எழுத்து தேர்வுக்கு செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் தேர்வு பணிகளுக்கு பணியமர்த்தப்படும் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கும் விதமாகவும் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியரின் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தேர்வாணையத்திலிருந்து வரப்பெற்ற அறிவுரைகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலரால் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் 26 மையங்களில் 7587 நபர்கள் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்வுக்கு 26 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 6 பறக்கும் படை, 6 நடமாடும் குழுக்கள் மற்றும் 26 அறை ஆய்வாளர்கள் உள்ளிட்டோருக்கு தேர்வு குறித்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.
தேர்வு நடைபெறும் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்து வசதிகளும், தேர்வு நடைபெறும் மையங்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.