At Perambalur, Tamil Nadu Government’s Photo Exhibition: Minister Sivashankar inaugurated and provided welfare assistance worth Rs.52.30 lakh.

பெரம்பலூர் நகராட்சித் திடலில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டரை ஆண்டு ஆனதை முன்னிட்டு அரசின் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியினை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கலெக்டர் கற்பகம் தலைமையில் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், மாவட்ட ஊராட்சி சேர்மன் சி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் கலெக்டர், எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய புகைப்படங்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.

தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக புகைப்படக் கண்காட்சியினை பார்வையிட வரும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் பாரம்பரிய உணவுத் திருவிழா, மகளிர் திட்டத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் தாயரித்த உணவுப்பொருட்கள், மூலிகைத் தேநீர் பொடி உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது. அரசுத்துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

குறிப்பாக இந்தக் கண்காட்சியில் ”முதலமைச்சருன் சுய புகைப்படம்” (sefi with CM) என்ற தலைப்பில் அமைக்கப்பட்டிருந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் புகைப்படத்தின் அருகில் நின்று மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். புகைப்படக்கண்காட்சியினை பார்வையிட வந்த பொதுமக்களும், சிறுவர் சிறுமியர்களும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் புகைப்படத்தின் அருகில் நின்று ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில் வருவாய்த்துறையின் சார்பில் 15 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணைகளையும், வேளாண்மைத் துறையின் சார்பில் தலா ரூ.1.40லட்சம் மதிப்பிலான ரொட்டோவேட்டர் வேளாண் கருவிகளை 5 நபர்களுக்கும், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் ரூ.18 லட்சம் மதிப்பில் வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டத்தின் மூலம் வேளாண் கருவிகளையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் தலா ரூ.87,500 வீதம் வெங்காய சேமிப்பு கிடங்கு அமைப்பதற்கான ஆணையினையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள், மூன்று சக்கர வண்டிகள் என மொத்தம் 40 பயனாளிகளுக்கு ரூ.52.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

போலீஸ். எஸ்.பி ஷ்யாம்ளா தேவி, பெரம்பலூர் நகராட்சி தலைவி அம்பிகா, திமுக தலைமை செயங்குழு உறுப்பினர் ராஜேந்திரன், யூனியன் சேர்மன்கள் மீனா அண்ணாதுரை (பெரம்பலூர்), பிரபா செல்லப்பிள்ளை (வேப்பூர்), ராமலிங்கம் (வேப்பந்தட்டை), பேரூராட்சி தலைவர்கள் சங்கீதா ரமேஷ் (குரும்பலூர்), ஜாஹிர் உசேன் (லெப்பைக்குடிக்காடு), பாக்கியலட்சுமி (பூலாம்பாடி),வள்ளியம்மை (அரும்பாவூர்), நகராட்சித் துணை தலைவர் ஹரிபாஸ்கர், மாவட்ட கவுன்சிலர் கருணாநிதி, முன்னாள் வேப்பூர் ஒன்றிய சேர்மன் அழகு.நீலமேகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!