BJP Ready to Contest any election: State President Annamalai !

பெரம்பலுரில் உள்ள ராமக்கிருஷ்ணா கல்லூரியில், பாரதிய ஜனதா கட்சியின் மதுரை பெருங்கோட்ட மாவட்ட மையக்குழு மற்றும் மண்டல் தலைவர்கள் கூட்டம் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள ராமகிருஷ்ணா கல்லூரி வளாகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்தது.

மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம், மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், மண்டல பொறுப்பாளரும் கட்சியின் மாநில பொதுச் செயலாளருமான ராம. ஸ்ரீனிவாசன் ஆகியோர் உரையாற்றினார். முன்னதாக மாநில இணை பொருளாளர் சிவசுப்பிரமணியம் வரவேற்றார். இக்கூட்டத்தில், மதுரை பெருங் கோட்டத்திற்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள பாஜகவின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பாரதிய ஜனதா கட்சியின் கட்சி வளர்ச்சிப்பணி குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தாவது:

நகர்புற அமைப்புகளின் தலைவர் பதவிக்கு நேரடி அல்லது மறைமுக தேர்தல் எதுவானாலும் அதை எதிர்கொள்ள பாஜக தயாராக இருக்கிறது. எப்படியாவது விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டும் என்பது பாஜக நிலைப்பாடு. அதிமுகவுடன் பாஜகவின் உறவு நீடிக்கிறது, வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு செய்ததை பாஜக இப்போதும் ஆதரிக்கிறது.

மத்திய அரசு கோமாரி நோய் தடுப்பூசி வழங்கவில்லை என்பது முற்றிலும் பொய். மத்திய அரசு தடுப்பூசி வழங்கிய விபரத்தை நான் தேதிவாரியாக இன்று(நேற்று) வெளியிட்டுள்ளேன். இது தவிர தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து நேரடியாக மாநில அரசு வாங்கவும் அதிகாரம் உண்டு. பற்றாக்குறை எனில் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து மாநில அரசு வாங்கிய தடுப்பூசி விபரத்தை தெரிவிக்க வேண்டும்.

மத்திய அரசு நிதி கிராம ஊராட்சிகளுக்கு போதிய நிதி தரவில்லை என்பதும் தவறான தகவல். கடமை, கண்ணியம், கட்டுபாடு என சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக, இப்போது கம்பெனி, கரப்சன், கமிஷன் என தனது கொள்கையை மாற்றிவிட்டது. தமிழ்நாடு அரசு மதுரையில் நிகழாண்டு எய்ம்ஸ் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை வேண்டாம் என சொல்லி எழுதிக் கொடுத்துவிட்டு வந்துவிட்டது இதனால், தமிழகத்துக்கு 150 மருத்துவ சீட் கிடைக்கும் வாய்ப்பு பறிபோய்விட்டது. நஷ்டத்தில் இயங்கும் தனியார் வங்கிகள், வாடிக்கையாளர்களின் நலன்கருதி லாபகரமாக இயங்கிக்கொண்டிருக்கும் பொதுத்துறை வங்கிகளுடந்தான் இணைக்கப்படுகின்றன. இதை தனியார்மயமாக்குகிறார்கள் என தவறாக தகவல் பரப்புகிறார்கள்.

ஒருகாலத்தில் பி.எஸ்.என்.எல் மிக லாபகரமாக இயங்கிய நிறுவனம் இப்போது நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் காங்கிரஸ் ஆட்சியில் அத்துறையின் அமைச்சர் பொறுப்பில் இருந்தவர்கள். இந்த நிறுவனத்தை வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது, என தெரிவித்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!