பெரம்பலூர் மாவட்டம் அ.மேட்டூரில் இருந்து பெரம்பலூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து தொண்டமாந்துறை கைகாட்டி அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது கிருஷ்ணாபுரத்திலிருந்து அரும்பாவூர் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென குறுக்கே வந்தது. அரசு நகரப் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டுள்ளார். அப்போது பேருந்து அருகில் இருந்த புளிய மரத்தில் மோதி நின்றது.
இந்த சம்பவத்தில் பேருந்தின் முன் பகுதி நொறுங்கி சேதமடைந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த அ.மேட்டூரை சேர்ந்த மணிமேகலை (வயது19), மோட்டார் சைக்கிளில் வந்த அரும்பாவூரை சேர்ந்த கிருபா (வயது20), அரவிந்த் (20) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்த 3 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.