CBI for Teacher Eligibility Test Scam To conduct an inquiry! PMK. Founder Dr.Ramadoss

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள மற்றொரு அறிக்கை :

தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் நடந்த ஊழல்களைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்விலும் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியமே இந்த முறைகேடுகளை கண்டுபிடித்திருக்கும் போதிலும், வாரிய அதிகாரிகளின் ஒத்துழைப்பின்றி இத்தகைய முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை.

தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு கடந்த ஆண்டு ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மொத்தம் 7 லட்சத்து 53,815 பேர் எழுதிய இத்தேர்வுகளின் முடிவுகள் கடந்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வுகளில் தகுதியில்லாத மாணவர்கள் பலர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், அனைத்து விடைத்தாள்களையும் சரிபார்க்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து அனைத்து விடைத்தாள்களும் கணினி மூலம் மறு மதிப்பீடு செய்யப் பட்டதில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தேர்ச்சியளிக்கப் பட்டிருப்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதுடன், இனிவரும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக வாரியம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு நடத்திய பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகிய இரண்டிலும் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரு தேர்வுகளிலும் விடைத்தாள்களை திருத்தி பட்டியலிடும் பணியை மேற்கொண்ட டேட்டாடெக் மெத்தோடெக் என்ற தனியார் நிறுவனம் தான் முறைகேடுகளை செய்ததாக குற்றஞ்சாற்றப்பட்டிருக்கிறது. விரிவுரையாளர் பணிக்கான தேர்வுகளில் சில மாணவர்களின் மதிப்பெண்களை பட்டியலிடும் போது, கூடுதலாக சில மதிப்பெண்களை சேர்த்து பதிவு செய்ததன் மூலம் அவர்களை சம்பந்தப்பட்ட நிறுவனம் தேர்ச்சி பெற வைத்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் மாணவர்களின் ஓ.எம்.ஆர் விடைத்தாள்களுக்கு பதிலாக சரியான விடை எழுதப்பட்ட வேறு விடைத்தாள்களை கணினியில் உள்ளீடு செய்து கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. விரிவுரையாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போட்டித்தேர்வுகளைப் பொருத்தவரை மிக முக்கியமான பணி என்பது மாணவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது தான். இந்தப் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் தான் மேற்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் தனியார் நிறுவனத்திடம் இந்தப் பணி எந்த அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஒருவேளை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதற்காக அந்தப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால் கூட, அந்தப் பணிகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூத்த அதிகாரிகள் அடங்கிய குழுவால் கண்காணிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யப்பட்டிருந்தால் தேர்வு மதிப்பெண் முறைகேடுகள் நிச்சயமாக நடந்திருக்காது. ஆனா£ல், அவ்வாறு செய்யப்படாததை எதேச்சையாக நடந்த, சாதாரண விஷயமாக கருத முடியாது.

தேர்வு முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்ததைப் பொருத்தவரை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தற்போதையத் தலைவர் ஜெயந்தியும், முன்னாள் தலைவர் ஜெகநாதனும் வெளிப்படையான முறையில் தான் நடந்து கொண்டனர். ஆனால், இவர்களைத் தாண்டி இந்த ஊழலுக்கு ஆட்சியாளர்கள் நிலையிலோ, அதிகாரிகள் நிலையிலோ யாரோ துணை போயிருக்க வேண்டும். இந்த ஊழல்களுக்கு முகவர்களாக செயல்பட்ட சிலரையும், கடைநிலை ஊழியர்கள் சிலரையும் கைது செய்து விட்டு, இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட அனைவரையும் தண்டித்து விட்டோம் என ஆட்சியாளர்கள் திருப்தியடைந்தால் அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதாகத் தான் அர்த்தமாகும். இது குற்றவாளிகளை ஊக்குவிக்கும்.

அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு நடைபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்விலும் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த அனைத்து ஊழல்களிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அம்பலப்படுத்தி தண்டனைப் பெற்றுத்தர வேண்டியது மிகவும் அவசியமாகும். எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வு உட்பட ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய அனைத்துத் தேர்வுகளிலும் நடைபெற்ற ஊழல்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் ஊழல் செய்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை தமிழக அரசு தகுதிநீக்கம் செய்ய வேண்டும், என அதில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!