Chennai will not Withstand a flood: speed up the canal divergence! PMK Ramadoss

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்க இன்னும் 6 வாரங்களுக்கும் குறைவான கால அவகாசமே இருக்கும் நிலையில் சென்னையில் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகள் இன்னும் பாதியளவு கூட முடிவடையவில்லை. 2015-ஆம் ஆண்டு மழை – வெள்ளத்தில் சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அத்தகைய நிலை ஏற்படாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் எங்குமே தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால், தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் மாநகராட்சி என்ற அமைப்பு இருக்கிறதா? என்று சந்தேகிக்கும் நிலையில் தான் அதன் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. சென்னையில் கடந்த ஆண்டு பெய்த மழையில் சேதமடைந்த மாநகராட்சி சாலைகள் இன்று வரை சீரமைக்கப்படவில்லை. ஆனால், பல இடங்களில் ஒரே ஆண்டில் பல முறை சாலைகள் போடப்பட்டதாக கணக்கு காட்டி மக்களின் வரிப் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. குப்பை அகற்றும் பணிகளும் சரிவர செய்யப்படாததால் சென்னை மாநகரம் குப்பைமேடாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. சீர்மிகு சென்னை நாற்றமெடுத்துக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் தென்மேற்கு பருவமழையால் பயனடையும் அனைத்து மாநிலங்களும் நடப்பாண்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடும் மழையால் வெள்ளம் ஏற்பட்டது. கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் பெய்த மழை காரணமாக காவிரி மற்றும் துணை ஆறுகளில் அதிக தண்ணீர் திறக்கப்பட்டதன் காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. கேரளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திச் சென்றது. கேரள வெள்ள பாதிப்புக் காட்சிகளை மனக்கண்களில் நினைத்துப் பார்த்தாலே, இரவுகளில் உறக்கம் வராது என்பது தான் உண்மை.

தென்மேற்கு பருவமழையைப் போலவே வடகிழக்குப் பருவமழையும் காவிரி பாசன மாவட்டங்களில் தொடங்கி வடதமிழகத்திலும், ஆந்திரம், தெலுங்கானா போன்ற மாநிலங்களிலும் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2015&ஆம் ஆண்டு மழை & வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகளின் சுவடுகள் அகலாத நிலையில், இம்முறை முன்கூட்டியே வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டியது தமிழக அரசு மற்றும் மாநகராட்சியின் கடமையாகும். ஆனால், இதில் இரு அமைப்புகளும் தோற்று விட்டன.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 1850 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் தூர்வாரி, சீரமைக்கப் பட வேண்டும். ஆனால், இவற்றில் பாதியளவுக்குக் கூட இன்னும் சரி செய்யப்படவில்லை. பல இடங்களில் இப்போது தான் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. சென்னையில் எந்த இடத்தில் எடுத்துக் கொண்டாலும் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் பயணம் செய்தால் மழை நீர் வடிகால் பணிகளுக்காக சாலைகளும், தெருக்களும் பள்ளம் தோண்டி சிதைக்கப்பட்டிருப்பதை காண முடியும். மழை நீர் வடிகால் பணிகள் பருவமழை தொடங்குவதற்குள் முடிவடைந்து விடும் என மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்துள்ள போதிலும் அது சாத்தியமானதாகத் தோன்றவில்லை. வடகிழக்குப் பருவமழை தொடங்க இன்னும் 6 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்குள் முடிக்கும் அளவுக்கு பராமரிப்புப் பணிகள் விரைவாக நடைபெறவில்லை.

மழைநீர் வடிகால்களை விட மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை ஆக்கிரமிப்புகள் தான். பாரம்பரியமாக நீர் வடியும் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் மழை நீர் வடிய வாய்ப்பே இல்லை. சென்னையில் அரை மணி நேரம் மழை பெய்தால் கூட முக்கியச் சாலைகள் வெள்ளக்காடாக மாறுவதற்கு காரணம் இந்த ஆக்கிரமிப்புகள் தான். இவற்றை அகற்றும்படி சென்னை உயர்நீதிமன்றம் பலமுறை ஆணையிட்ட பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்காதது உயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.

சென்னை மாநகராட்சியில் நடைபெறும் ஊழல்கள் தான் இந்த அனைத்து சீரழிவுக்கும் காரணம் ஆகும். இந்த ஊழல்கள் பேரழிவை ஏற்படுத்தி விடும். எனவே, தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் விழித்துக் கொள்ள வேண்டும். வெள்ளநீர் வடிகால்களை சீரமைத்தல், மழைநீர் வடியும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் வெள்ளம் ஏற்படாது என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும், என தெரிவித்துள்ளளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!