Chief Minister’s order: Birth and death certificates without delay fee: Perambalur Collector Information!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று நோயினால் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களை குறைக்கவும், நோய் பரவலை கட்டுப்படுத்தவும், சிகிச்சை வசதிகளை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. நமது மருத்துவர்களின் சீரிய முயற்சிகளையும் மீறி தவிர்க்க முடியாத நேர்வுகளில் இறப்புகள் நிகழ்ந்துவிடுகின்றன.
துயரமான இந்த சம்பவத்தில் சில காரணங்களினால் இறப்பு குறித்து வரையறுக்கப்பட்ட காலகட்டத்தில் அதாவது இறப்பு நிகழ்வுற்ற 21 நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இது பிறப்பு இறப்பு பதிவுச்சட்டம் 1969 மற்றும் தமிழ்நாடு பிறப்பு இறப்பு விதிகள் 2000ன் படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்திற்கு பின் அதாவது 21 நாட்களுக்கு மேல் 30 நாட்கள் வரை காலதாமத கட்டணம் ரூ.100 -ஆகவும், 30 நாட்களுக்கு பின் ஓராண்டிற்குள் ரூ.200-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெருந்தொற்றினால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில், இந்த கட்டண முறையானது ஒரு சுமையை ஏற்படுத்தி வருவது தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதன் அடிப்படையில், இக்கட்டணத்திலிருந்து பொதுமக்களுக்கு விலக்களிக்கவும், அந்த காலதாமத கட்டணத்தை அரசே ஏற்றுக் கொள்ளும் என்று செய்தி வெளியீடு எண்.245, 08.06.2021 நாளிட்ட அரசு வெளியீட்டில் அறிவித்தியுள்ளார்.
அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கிராமங்களில் 01.01.2020 முதல் நிகழ்ந்த பிறப்பு இறப்பு குறித்த காலந்தாழ்வு பதிவு விண்ணப்பங்களுக்கு பிறப்பு இறப்பு விதிகளில் வரையறுக்கப்பட்ட காலதாமத கட்டணம் வசூலிக்கப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. காலதாமத கட்டண விலக்கினால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்படக்கூடிய வருவாய் இழப்பீட்டினை உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசே ஈடுசெய்யும் எனவும், இருப்பினும் உரிய காலத்தில் பிறப்பு இறப்பினை பதிவு செய்திட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பினை நல்கிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!