Community Baby Shower Festival near Namakkal: Senthamangalam MLA Chandrasekaran Participation
நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத் துறை சார்பில், வட்டார சமுதாய வளைகாப்பு விழா எருமப்பட்டியில் நடைபெற்றது.
சேந்தமங்கலம் எம்எல்ஏ சந்திரசேகரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட வளைகாப்பு சீர்வரிசை பொருட்களுடன் தனது சார்பில் நிதி உதவியும் வழங்கினார்.
வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்(பொறுப்பு) கீதா முன்னிலை வகித்தார். கர்ப்பிணிகளுக்கு பிரசவ கால முன் கவனிப்பு, பின் கவனிப்பு மற்றும் அரசு சார்பில் வழங்கப்படும் திட்டங்கள் குறித்து வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாலமுரளிபாபு, மருத்துவம் சாராத மேற்பார்வையாளர் முருகேசன் ஆகியோர் விளக்கமளித்தனர்.
கர்ப்பிணிகள் பதிவு செய்ய வேண்டிய அவசியம், தடுப்பூசி போட்டுக் கொள்வதின் அவசியம் குறித்து கிராம சுகாதார செவிலியர் தமிழரசி விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில் கர்ப்பிணிகளுக்கு 5 வகை கலவை சாதம் வழங்கப்பட்டது.
சமுதாய வளைகாப்பு விழாவில் 150 கர்ப்பிணி தாய்மார்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.