பெரம்பலூர், ஜூன்.3 – பெரம்பலூரில் வழக்கறிஞருக்கு ரூ.10ஆயிரம் இழப்பீட்டு தொகை வழங்குமாறு, செல்போன் விற்பனை நிறுவனம் மற்றும் காப்பீட்டு நிறுவனத்திற்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றுபவர் அய்யம்பெருமாள் (வயது49). இவர் பெரம்பலூர் பழைய பேருந்துநிலையம் அருகே என்.எஸ்.பி. சாலையில் உள்ள பிரபல செல்போன் விற்பனை நிறுவனத்தின் கிளையில் 13.8.2012 அன்று ரூ.4ஆயிரம் மதிப்புள்ள 1 வருட வாரண்டியுடன் கூடிய செல்போனை வாங்கினார். ஓரீரு மாதங்களில் அந்த செல்போனில் டிஸ்பிளே பழுதானது.
இதுதொடர்பாக மொபைல் விற்பனை நிலையத்தை அய்யம்பெருமாள் அணுகி முறையிட்டபோது, இங்கு சர்வீஸ் வசதியில்லை. அங்கீகரீக்கப்பட்ட சேவை மையத்தில் செல்போனை கொடுத்து பழுதை இலவசமாக சரிசெய்து கொள்ளலாம். அல்லது தாங்கள் செலவு செய்து பழுதை சரிசெய்த பிறகு அதற்குரிய பில்லை கொடுத்து எங்களிடம் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.
அதன்படி அய்யம்பெருமாள், 19.6.2013 அன்று செல்போனில் பழுதை சரிசெய்து அதற்குரிய பில் ரூ.1162-ஐ, மொபைல் விற்பனை நிலைய கிளையில் கொடுத்துள்ளார். ஆனால் செல்போன் விற்பனை நிறுவனத்தினர் பில்தொகையை வழங்காமல் அய்யம்பெருமாளை அலை கழிப்பு செய்துள்ளனர்.
இதனால் மனஉளைச்சல் அடைந்த அய்யம்பெருமாள் மொபைல் நிறுவனம், திருச்சி தில்லைநகரில் உள்ள பன்னாட்டு மொபைல் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற செல்போன் பழுதுநீக்கும் மையம் மற்றும் சென்னையில் உள்ள நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் மீது பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றத் தலைவர் கலியமூர்த்தி, உறுப்பினர்கள் அன்பழகன், ஜெயலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர்.
வழக்கு நிறைவில் மனுதாரர் அய்யம்பெருமாளை மனஉளைச்சல் மற்றும் சிரமத்திற்கும், பொருளாதார இழப்பிற்கும் ஆளாக்கிய மொபைல் நிறுவனம் நியூஇந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம், ஆகிய 2 நிறுவனங்களும் சேர்ந்து இழப்பீட்டுத் தொகை ரூ.10ஆயிரமும், வழக்கு செலவுத் தொகையாக ரூ.2ஆயிரமும், செல்போனை பழுதுநீக்கியதற்கான பில்தொகை ரூ.1162- ஆகியவற்றை 2மாதத்திற்குள் வழங்கவேண்டும் என்றும் உத்திரவிட்டனர்.
2-வது எதிர்மனுதாரரான தில்லைநகரில் உள்ள செல்போன் பழுதுநீக்கும் சேவைமையத்தின் மீதான புகார் தள்ளுபடி செய்யப்பட்டது.